பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

சோலை சுந்தரபெருமாள்


இவன் கூட இரண்டு வருஷங்கள் அங்கே வேதம் படித்தான். அப்போதும் இதே ராமச்சந்திர சர்மாதான் வாத்தியார். படு கண்டிப்பு. பையன்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து மடிவேஷ்டி கட்டிக்கொண்டு விபூதியை அப்பிக்கொண்டு உள்ளே வரும்போதே பின்புறம் கைவைத்து கௌபீன முடிச்சைத் தொட்டுப் பார்ப்பார். கௌபீனம் கட்டிக் கொண்டிராத பையன்களுக்கு அன்று சரியான உதை. சோறு போடமாட்டார். இந்தப் பழக்கமே பின்னால் பையன்களை மிரள வைத்திருக்கிறது. சில பையன்கள் பாதியில் இதன் காரணமாகவே ஓடிப்போகிறதும் உண்டு. பெண்டாட்டி இல்லாத அந்த மனுஷனின் வக்கிரம் இப்போது கூட இந்த வயசிலும்கூட அவர் கண்களில் குறுகுறுப்பது நன்றாகத் தெரிந்தது.

பையன்கள் இவனை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு வருத்தமாக இருந்தது. இங்கு வருவதை விட்டுவிட்டு வேறெங்காவது நாலு தமிழ் நாலு இங்கிலீஷ் எழுத்துக்களைப் படித்துவிட்டு எங்காவது குமாஸ்தாவாகவோ, ப்யூனாகவோ போய் அடிபட்டு அல்லாடிக் கொண்டிருக்கக் கூடாதா என்று நினைத்தான். சோற்றுக்காக எட்டு வருஷம் வேதம் படித்துவிட்டு பிரகஸ்பதியாக வந்து உலகத்து அழுக்கையெல்லாம் எரிக்கவா போகிறான்கள். அமாவாசை தர்ப்பணத்துக்காக ஓடி ஓடி நாலனாவுக்கும், எட்டணாவுக்குமாய்ச் சந்தி சிரித்து பரங்கித் துண்டமும் நாலு வாழைக்காய் கால்படி அரிசி என்று ஆயிரம் இளிவரல்களை சந்தித்து மூட்டைகட்டி கல்யாணத்திற்கு நிற்கும் நான்கு பெண்களைப் பார்த்து பெருமூச்செறிந்து எதற்காகவோ காரணமின்றியோ மனைவியை சபித்து கூனிக்குறுகி ஆஸ்த்மாவின் சுருண்டு போகும் வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறதடா பசங்களா என்று சத்தம் போட வேண்டும் போலிருந்தது.

இவன் நடந்தான். சிவன் கோயில் வழியாகத் தாண்டி தெற்குப்புறம் வந்தபோது- அதற்குள் எத்தனை பேரைச் சந்தித்து விட்டான். இதெல்லாம் பழிவாங்கவா?

கோயில் குருக்கள் வழிமறித்தார். “ரங்கஸ்வாமி சார்...” என்று நக்கல் தொனிக்கக் கூப்பிட்டார். “ஏன் சார்... கல்யாணி இப்ப உன்னோட இல்லையாமே அதான் இப்படி தேஞ்சு போயிட்டேள்- எப்டி . இருப்பேள் ராஜாவாட்டமா? சாகும்போது சாமாவையர் சபிச்சுண்டேதான் செத்தான். பிராம்மணன் சாபம் சும்மா விடுமான்னா?”

வைத்தினாதக் குருக்கள் உருவத்தில் பிரம்மாண்டமானவர். மற்ற குருக்கள் மாதிரி நைவேத்யச் சோற்றை மட்டும் நம்பி இருப்பவரில்லை. கொஞ்சம் நிலபுலங்கள் மாடுகன்று என்று