பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

53


“என்னய்யா முழுப்புரட்டு! அந்தப் பெண் இன்னும் ஆளாகவில்லையே” என்று யாரேனும் கேட்டால், “காமத்துக்குக் கண் கிடையாது” என்று உளறுவான். வம்பும் ஒருவாறு அடங்கிவிட்டது.

இவ்வாறு ஆறு மாதம் கழிந்திருக்கும். வழக்கமாக வண்ணான் துறைக்குத் துணிகளை வெளுக்க எடுத்துச் செல்லுவாள் வீரம்மாள். அங்கே துணிகளைத் துவைக்கையில், தனது தகப்பனில்லாத காலத்தில், ஒவ்வோர் அடிக்கும், “வாத்தியாரே எங்கு போனீர்கள்? என்னை, மறந்து போனீர்களே” என்று சொல்லித் துவைப்பாள். நாளுக்கு நாள் மெலிந்து போனாள். ஒருவருக்கும் தெரியாமல், ஒருநாள் துறையில், நீரில் விழுந்து இறந்துபோனாள்.

வீரம்மாள் இறந்து சிறிது காலம் இருக்கும். தான் கமலாபுரத்தை விட்டுச்சென்ற ஒரு வருஷ காலமாக, நாராயண சர்மாவுக்கு, லீவு கிடைக்கவில்லை. எத்தனையோ தடவை மேலதிகாரிக்கு எழுதிப் பார்த்தான், பலிக்கவில்லை.

“இந்தச் சமயத்தில் லீவு கொடுக்க முடியாது” என்று ஒவ்வொரு தடவையும் கடுமையாக அதிகாரியின் பதில் உத்தரவு அவனுக்குக் கிடைத்தது. ஏக்கமுற்றான். “வீரம்மாளிடம் சொல்லிக்கொண்டு வரமுடியவில்லையே” என்று பல தடவைகளில் வருத்தமுறுவான். கடைசியாக லிவு கிடைத்தது. கமலாபுரத்துக்கு ஒருநாள் மாலையில் வந்து சேர்ந்தான். வீரம்மாள் தண்ணீரில், விழுந்து இறந்ததைக் கேள்விப்பட்டான். மறுநாள் காலையில், வண்ணான் துறையில் நாராயண சர்மாவின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது.