பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

59


மரக்கட்டைகளையும், ஆணி, பிரம்பு, மெழுகு சிலை, ரெட்டு, வில், கண்ணாடி முதலிய சாமான்களையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் குருமூர்த்தி வாங்கிப்போட்டார். உதவிக்கு ஆட்களையும் அமர்த்திக் கொடுத்தார். அவர்களுக்கெல்லாம் கூலி உண்டு. சாந்தப்பன் மாத்திரம் ஒரு கூலியும் பேசிக்கொள்ளவில்லை. குருமூர்த்தியிடம் சாந்தப்பன் கூலி வாங்கிக் கொள்வதா? அவர் அவனுடைய வள்ளல்; அவன் அவருடைய கலைஞன். ஆனால், அவர் கொடுக்கும் பணத்தையெல்லாம்விட, “பேஷ்! சாந்தப்பா!” என்று அவர் புகழ்ந்து இரண்டு வார்த்தை சொன்னால், அதுவே அவனுக்குப் பெரும் பரிசு.

எந்தக் காலத்திலுமேதான் ‘குருமூர்த்தியின் வீட்டில் சாந்தப்பனுக்குச் சர்வோபசாரமும் நடக்கும். வேலை செய்யும் காலத்தில் கேட்க வேண்டுமா? காபி, பலகாரம், சாப்பாடு எல்லாம் அவனுக்கு அங்கேதான். ஆனால், அவற்றை அவன் பூர்ணமாய் ரசித்து அனுபவிக்கவில்லை. பட்டினியோடு வேலை செய்வதில்தான், அவனுக்கு அதிக இஷ்டம். சுடச் சுடச் சரியான நேரத்தில் எதையும் அவன் உண்டதில்லை. எடுத்த வேலையை முடித்துவிட்டே எதுவானாலும் உண்பான். அதற்குள் எல்லாம் ஆறி அவலாய்ப் போய்விடும்.

பெட்டிவண்டி வெகு சீக்கிரத்திலே உருப்பெற்றது. நாலு மாதத்துக்கெல்லாம் அசலூரிலே ஒரு கல்யாணம். “அதற்கு என் வண்டியிலேதான் குருமூர்த்தி ஐயா போகவேண்டும்” என்று சொன்னான் சாந்தப்பன். அப்படியே தயாராகிவிட்டது பெட்டி வண்டி.

கூண்டுகட்டி, ‘பெயிண்ட்' எல்லாம் மூன்று கோட்டிங் கொடுத்தாயிற்று. கூண்டிலே பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா முதலிய வர்ணக் கண்ணாடிகள் பதித்தாயிற்று. கூண்டுக்கு மேலே வர்ணங் கொண்டு அழகான சித்திரங்களைத் தன் கையாலேயே தீட்டினான் சாந்தப்பன். ஓவியத்தில் கூட வல்லவன் தான் அவன்!

“பேஷ்! ஜோரான பெட்டி வண்டி! பலே வேலைக்காரன் சாந்தப்பன்!” என்றார் குருமூர்த்தி.

சாந்தப்பன் மீசைக்காரன் அல்ல; ஆனால், மீசை இருக்க வேண்டிய இடத்தை அவன் தடவிக்கொண்டான்.

இப்படி இந்தப் பெட்டி வண்டி உருவான காலத்தில் சரசு சின்னக்குழந்தை அல்ல; அவளுக்குப் பிறகு எட்டுக் குழந்தைகள் பிறந்திருக்கவேண்டிய அளவு அவள் வளர்ந்துவிட்டாள். சரசுவின் வயசு பதினொன்று. அப்படியிருந்தும், அவளுக்குப் பின் அவள் அம்மாள் சிவகாமி கருத்தரிக்கவே இல்லை. ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்திருக்கலாகாதா? பாழுந்தெய்வம்; குருட்டுத்