பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

61


எப்படி அறிவான்?

“இனி உனக்குப் பிள்ளையே பிறக்காது” என்று ஒருநாள் கனவில் வந்து சிவபெருமான் அவருக்குச் சொல்லிவிட்டாராம். சிவகாமியிடம் தாம் இதைத் தெள்ளத் தெளியத் தெரிவித்து விட்டதாகச் சொல்லிச் சிரித்தார் குருமூர்த்தி. என்ன துர்ப்பாக்கியம்! நிராசை என்பது நீற்றுப்போன நெருப்பல்ல என்று அவர் அறியவில்லை. அது நீறு பூத்த நெருப்பு; காற்றடித்ததும் கிளர்ந்து கனன்று ஜவாலை ஆகிவிடுமே! ஆகிவிட்டதே! அந்தத் தீ இதோ இன்றுகூட எரிகிறதே!

கல்யாணத்துக்குப் புறப்பட்டாயிற்று. தெருவிலே இருந்த இரண்டு, மூன்று குடும்பங்கள் வண்டிகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டன. எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்று; உறவினர்கள், ரத்தினம் சம்பந்தமில்லாதவன். ஆனால், அவன் தான் குருமூர்த்தியின் குடும்பத்துக்கு உற்ற துணைவனாகிவிட்டானே. குருமூர்த்தியின் ஆஸ்தானக் கலைஞன் சாந்தப்பன்; ஆஸ்தானப் புலவன் ரத்தினசாமி. இருவரும் கூடவே புறப்பட்டார்கள்.

ரத்தினத்தின் அப்பாவுக்கு அவன் ஒரு தறுதலை. “கட்டுக்கடங்காத பிள்ளையை வெட்டிப் போட்டால் என்ன?” என்று, அவன் இல்லாத சமயத்திலெல்லாம் அவர் திட்டிக் கொண்டிருப்பாரே ஒழிய, நேரிலே ஒன்றும் சொல்வதில்லை. எந்த விதமாகவும். அவனைக் கண்காணிப்பதில்லை. இப்போதுதான் அவன் உச்சிக் குடுமியாயிருக்கிறான். அப்போதெல்லாம் அவன் தலையிலே கட்டுக் குடுமி. பாதித் தலைக்கு மேலே அது பரவியிருக்கும். அதற்கு முன்னே சன்னமாகக் கன்றுக்குடுமி வைத்துக் கொண்டிருப்பான். அதைப் பார்த்து அவன் அப்பாவுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். ‘இந்தப் பயலின் கேராவும் கிருதாவும்’ என்று அவர் பெருமூச்செறிவார். ‘கன்றுக் குடுமிக்கும்’ ‘கோ-கிருதாவுக்கும்’ அவருக்கு வித்தியாசம் தெரியாது. சரியான வாலிபம். இருபத்தைந்து வயசு. ரத்தினம் டில்பஹார் தைலந்தான் பூசி வருவான். தலையிலே அடத்தியில்லாது மயிர் சொற்பமாக இருந்தாலும், முடிச்சுப் ‘புஸு புஸு’ என்று விலத்தியாய்ப் பெரிசாய் இருக்கும்படி தளுக்காக முடிந்து கொண்டையூசி செருகிக் கொள்ளுவான். சில சமயம் பெண்களைப்போல் செருகு கொண்டையும் போட்டுக்கொள்வான். கோதி வாரிவிட்ட மயிர் பறக்காது. ஆனாலும் அதைப் படிய வைக்கும் ‘கமான் வளைவுச் சீப்பு’ அவன் தலையிலே எப்போதும் அலங்காரப் பொருளாய் அமர்ந்திருக்கும். மஸ்லின் ஜிப்பா. வெண்பட்டு அங்கவஸ்திரம்.. இடுப்பிலே அழகாகக் கட்டமிட்ட வர்ணக் கைலி, நெற்றியிலே சன்னமாக வாசனைச் சாந்துப்பொட்டு, எப்போதும் வெற்றிலை மென்று சிவந்திருக்கும் அவன் உதடுகள், கதுப்பிலே புகையிலையைக் கிள்ளி