பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

73


கண்ணை முடினேன். ஒரு சல்லடையும் அதன்மீது ஒரு புஸ்தகம் உருகி நீராகக் கொட்டுவது போன்ற சித்திரமும் தெரிந்தன. எதற்காகப் பணத்தை வீணாக்கிப் புத்தகம் வாங்கினாய்? சல்லடையில் ஐலம் நிற்குமா? என்ன இன்பம் மிஞ்சிற்று? என்று அந்தச் சித்திரம் குத்திக் காட்டுவதுபோல் இருந்தது.

அப்பொழுது “யாரையா பெட்டிமேலே? அதென்ன நாற்காலியா?” என்று ஒரு குரல் அதட்டவே, திரும்பிப் பார்த்தேன். ரெயில்வேச் சிப்பந்தி! அதிகாரத்தின் முன் அகப்பேய்ச் சித்தர்கூட என்ன செய்யமுடியும்? அவன் அதட்டலைக் கேட்ட என் தத்துவ விசாரமெல்லாம் நண்டுபோல் வளைக்குள் பதுங்கிவிட்டது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் பொழுதும் அந்தச் சுமையும் என்னைவிட்டு நகரவில்லை.

இப்படியே நரக வேதனையாக அரைமணி கழிந்தது. அதற்குப் பிறகு சொர்க்கவாசல் திறந்தது. ரெயில் ஆரவாரத்துடன் எதிரில் வந்து நின்றது. வெகு ஆறுதலடைந்து அதில் ஏறினேன்.

சென்னை சேரும் வரையில் அதிகச் சங்கடம் இல்லை. ஸ்டேஷனைவிட்டு என் நண்பன் வீட்டுக்குச் சென்றேன். ஆபீஸ் தவளை என்று நண்பன் என்னைப் பரிகாசம் செய்வதுண்டு. ஆகையால் என்னைப் பார்த்தவுடன் எதிர்பாராத மழையை வரவேற்பதுபோல், உத்ஸாகம் பொங்க “வா ரிசியசிருங்கா!” என்று வரவேற்றான்.

பிறகு சிறிதுநேரம் குடும்ப சுகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காலை உணவு ஆயிற்று. பொழுது அப்பொழுதும் சுமையாக உட்கார்ந்திருந்தது. ஆபீஸ் இல்லை. வேறு வேலையும் இல்லை. என்ன செய்வது?

நண்பனை அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டேன். ஒரு திட்டமும் இல்லை, ஒரு குறிப்பும் இல்லை. சுற்றினோம், சுற்றினோம், அப்படிச் சுற்றினோம்! பகல் பன்னிரண்டு மணிக்குக் கூடக் கடற்கரையில் இருந்தோம். திரும்பி வரும்பொழுது அதுவரையில் சும்மா வந்த நண்பன் கால் கண்டைச்சதையைப் பிசைந்துகொண்டே கேட்டான்:

"ஏழு மைலாவது கடந்திருப்போமே; எதற்காக?”

“சும்மாத்தான்.”

நண்பன் நல்ல மதியூகி.

“சும்மாத்தான்பா? அதாவது வாழ்வில் பிடிப்பு விட்டுப்போய் அயர்வு தோன்றிவிட்டதென்று பொருள், மாயமான் சிக்கவில்லை என்ற வருத்தம். வண்டு, தேனைத் தேடுவதுபோல் பித்துப் பிடித்து அலைகிறாய். மோட்டார் வண்டியும், தார்போட்ட விதியும், சிமிட்டி மாடியும், வீடில்லா அநாதையும், டிராம் வண்டியும், ஒண்டுக்