பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கு. ப. ராஜகோபாலன்

மிழில் சிறுகதை இலக்கியம் பொற்காலம் காண முன்னுரை எழுதியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து கொண்டு அவர் செய்த பணியைச் சின்ன வட்டத்துள் நாம் அடைத்து விடமுடியாது. வசன கவிதை, விமரிசனம், நாவல்துறை இவற்றிலும் கணிசமான அளவு வெற்றி பெற்றவர். ஆனால் சிறுகதையில் அவர் ஸ்தானம் மிகவும் முக்கியமானது. புதுமைப்பித்தன், மெளனி என்பவர்களுடன் சேர்த்துச் சொல்லக்கூடியது.

உண்மையில் கு.ப.ரா. வும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான பிச்சமூர்த்தியும் சிறுகதாசிரியர்களாகப் போற்றப்படுவதைக் கண்டு ‘அவர்களை விட என்னால் நல்ல சிறுகதைகள் எழுதமுடியும்’, என்று சொல்லித்தான் மெளனி எழுதவே தொடங்கினார் என்று சொல்லுவார்கள். வ.ரா. கா. சி. வேங்கட ரமணி போன்ற முதுபெரும் எழுத்தாளர்களுக்குச் சகாவாக இருந்தவர் கு.ப.ரா. அவர்களைப் போலவே இவரும் இலட்சியவாதி. பல எழுத்தாளர்களை உருவாக்குவதில் சிரத்தை காட்டியவர் என்று அறிமுகப்படுத்தும் க.நா.சு, கு.ப.ரா வின் சிறுகதைகளைப் பற்றி இப்படி கணிக்கிறார்; ‘புதுமைப்பித்தனைப் பார்க்கிலும் சிறுகதையில் உருவப் பரிசோதனை செய்திருக்கிறார். வெற்றியும் பெற்றுள்ளார்.’

“ஆண், பெண் உறவு என்னும் ஒருமுகப்பார்வை உள்ளதே தவிர பல்வகை காட்டும் பன்முக நோக்கில்லை” என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு கா. சிவதம்பி, “இலக்கியத்தில் உணர்ச்சி விவரிப்பே உயரியது. இதுவே மனித வாழ்வில் தலையாயது. அதுதான் மனிதனைச் சரியாக எடுத்துக்காட்டுவது என்ற கொள்கை கொண்டவர் கு.ப.ரா. இத்தகைய உணர்ச்சி நிலைகள் தோன்றுதற்குக் களமாய் அமைந்தவற்றுள்ள ஆண், பெண் உறவுக் களத்தினடியாகத் தோன்றுவதன் காரணமே இது...” என்கிறார்.

ஒரு நல்ல சிறுகதை எப்படிச் சிறப்பாக அமையவேண்டும் எனப் படைப்பாளராலும், திறனாய்வாளராலும் எடுத்துக்காட்டப் பெறும் உயரிய கதை ‘விடியுமா?’