பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

79


“நான் இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல் போயிருக்காமல் போனேன்!”

‘ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?”

“ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?”

“ஆஸ்பத்திரிப் பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக்கூடாதா?”

“அப்படி அடிக்க முடியுமோ?" குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.

“ஏன் முடியாது? தந்தியாபீஸில்.”

“ஒருவேளை அப்படியிருக்குமோ?” என்று கேட்ட பொழு குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.

“அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தாநாள் தானே கடிதாசு வந்தது!”

“ஆமாம்! அதில் ஒடம்பைப் பத்தி ஒண்ணுமே இல்லையே?” -

“தந்தி யடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரிப் பேரை வைத்து அடித்திருக்கிறார்.”

“அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி! அப்படியிருக்குமா?” என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டபொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?

“நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்” என்றேன்.

மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம். கொஞ்சநேரத்திற்கு ஒருதரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரம் அடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.

சுகமோ துக்கமோ, எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?