பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சோலை சுந்தரபெருமாள்


முழுதும் சொன்னாள்.

“மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!” என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்சநேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. எதோ பெருத்த குற்றம் செய்தவன் போலத் திகிலடைந்தாள், ‘ஐயையோ! பைத்தியம்போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிண்டிருக்கேனே!’ என்று எண்ணினவள் போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.

ஆனால் எவ்வளவு நேரந்தான். கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம். துக்கத்தில் நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?

வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு கிராமத்தைச் கடந்து போய்க் கொண்டிருந்த பொழுது கோழி கூவியது கூடக் காதில் வந்துபட்டது.

‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒரு பக்கம்.

‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ !’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.
இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவது போல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
“செங்கற்பட்டில் பல் தேய்த்துக் கொண்டு காபி சாப்பிடுவோமா?” என்று கேட்டான்.
“எல்லாம் பட்டணத்தில் தான்!” என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள், பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் துாங்கிக்கொண்டிருந்தாள்.
"இதோ ஆயிற்று, அதோ ஆயிற்று” என்று சொல்வது போல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் எங்களுக்கென்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வேண்டுமேன்றே வண்டி ஊர்வது போல இருந்தது.