பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

83


எழும்பூர் வந்தது கடைசியாக.

ஸ்டேஷனில் யாரும் இல்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை. எல்லோரும் இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வர வேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.

வீட்டுக்குப் போனோம், வீடு பூட்டியிருந்தது.

உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை, இப்பொழுது!

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணிநேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.

“நீங்கள் கும்பகோணமா?” என்றார். "ஆமாம்” என்றேன்.

“நோயாளி- நேற்றிரவு- இறந்துபோய்விட்டார்' என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்,

“இறந்து.? அதெப்படி? அதற்குள்ளா?” அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை .

“சிவராமையர்?”

“ஆமாம், ஸார்!”

“ஒரு வேளை”

“சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.

கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக்கொண்டோம்.

அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!. ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.

பிறகு?

விடிந்துவிட்டது!