பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஜெனரலுக்கு முறையிட்டார். லார்ட் கார்ன்வாலிஸ் சென்னைக் கவர்னருக்கு எழுதினார். அந்நாளில் கவர்னராக இருந்த சர் ஆர்ச்சிபால்ட் காம்பெல் 1787இல் தஞ்சைக்கு வந்து 12 பண்டிதர்களின் கருத்தைக் கேட்டார். அவர்கள் சரபோஜியின் சுவீகாரம் செல்லாது என்று எழுதிக் கொடுத்தனர். ஸ்வார்ஷ் என்ற பாதிரியாரின் இடையீட்டினால் சரபோஜியின் உரிமைபற்றி மீண்டும் விசாரணை நடந்தது. சரபோஜியின் சுவீகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சரபோஜி அரசரானார். சரபோஜி அரசரானதும் கும்பினியாருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி தஞ்சை மாநகரம் மட்டும் இவர் ஆட்சிக்கு உட்பட்ட தாயிற்று. எஞ்சிய பகுதிகள் ஆங்கிலேயர் வசம் ஆயின. இரண்டாம் சரபோஜி ஒரு லக்ஷம் வராகனும், மொத்த நிகர வசூலில் 5இல் ஒரு பங்கும் பெறலாயினார். இரண்டாம் சரபோஜிக்கு ஒரே மகன் இருந்தார். அவர் இரண்டாம் சிவாஜி எனப்பெற்றார். இவர் 1832 முதல் 1855 வரை அரசராக இருந்தார். இவர்க்கு ஆண் குழந்தைகள் இல்லை. ஆகவே 1852ல் ஒரே நாளில் 17 பெண்களை மணம் செய்து கொண்டார் ; எனினும் அவர்கள் திருவயிற்றில் குழந்தைகள் பிறக்கவில்லை. ஆகவே இவர் இறந்ததும் தஞ்சையில் பெயரள வில் இருந்த மராட்டிய மன்னர் ஆட்சியும் மறைந்தது. தஞ்சை மாநகரமும் ஆங்கிலேயர் நேர் பார்வைக்கு உட்படலாயிற்று. இவ்வரசர்கள் ஆட்சி செய்த காலத்து எல்லாக் கணக்குகளும் பிறவும் மராட்டிய மொழியிலேயே மோடி எழுத்தில் எழுதப் பெற்றன. மராட்டியர் ஆட்சி, தஞ்சை நாயக்க மன்னர் ஆட்சிக்கு அடுத்து ஏற்பட்டது; ஆதலின் தெலுங்கு பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்ததாதல் வேண்டும். பெரும்பாலான மக்கள் பேசிய மொழி தமிழ் ஆகையால் தமிழ் மொழியும் வழக்கில் இருந்தது. அரசர்கள் வடமொழியிலும் வல்லுநராக இருந்தமையின் சமஸ்கிருதமும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இவ்வெல்லா மொழிகளிலும் நூல்கள் எழுந்தன. நவாபு ஆட்சி செய்தமையாலும் முகமதியர் பலர் வாழ்ந்தமையாலும் அராபி மொழியும் பாரசீக மொழியும் சிலர் பேசினர். வேற்றுநாட்டவர் ஆகிய டேனிஷ்காரர் பிரஞ்சுக்காரர் ஆகியவர்களும் வாணிபத்திலும் உள்நாட்டு விவகாரங்களிலும் ஈடுபட்டமையால் அவர்கள் மொழியிலும் சில ஆவணங்கள் உண்டு. ஆங்கிலேயர்கள் மேலோங்கி நாட்டாட்சியைக் கைப்பற்றியமையால் ஆங்கிலம் கலந்து எழுதுதலும், ஆங்கிலத்திலேயே எழுதுதலும் ஏற்படலாயின. இங்ங்ணம் பன்மொழிக் கலப்பு நிகழலாயிற்று. மக்களும் பல மொழிகளும் கலந்து பேசலாயினர் என்னலாம். மராட்டிய மன்னர்கள் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் ஆகலின் அவர்கள் மகாராட்டிர மகளிரையே மணம் செய்துகொண்டனர். முதல் அரசராகிய ஏகோஜிக்குத் தீபாபாயி அண்ணுபாயி என்ற இரு மனைவியர் :