பக்கம்:தந்தையும் மகளும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

111

கறுப்பாக்கி வைத்துக்கொண்டு அதை இரவு முழுவதும் விளக்கைச் சுற்றிக் சுழன்றுகொண்டே இருக்குமாறு செய்கிறார்கள் அதனால் கப்பலில் உள்ளவர்களுக்கு முதலில் ஒளி தெரியும்;பிறகு சில செக்கண்டு நேரம் ஒளி தெரியாது, பின்னர் மறுபடியும் ஒளி தெரியும். இதையும் நீ சென்னையில் பார்த்திருக்கிறாய் அல்லவா? இவ்வாறு ஒளியானது விட்டு விட்டுத் தெரிவதால் இது தான் கலங்கரை விளக்கம் என்று அறிந்து கொள்வார்கள்.

108அப்பா ! வைரம் அதிக பளபளப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! நவரத்தினங்கள் அனைத்திலும் அது தான் அதிக பளபளப்பானது. அதற்குக் காரணம் அது தன்மீது படும் ஒளியைத் திருப்பி அனுப்பவும் பல்வேறு நிறக் கதிர்களாகப் பிரிக்கவும் மிகுந்த ஆற்றலுடையதாயிருப்பதுதான் ஆனால் வைரத்தைப் பூமியிலிருந்து எடுத்தவுடனேயே அந்தச் சக்தியுடையதாக இருப்பதில்லை. அநேகமாக சாதாரணக் கல் மாதிரியே தான் இருக்கும். அதன் மீது சாம்பல் நிறமான ஒரு படலம்கூடக் காணப்படும். அதைத் தேய்த்து நீக்கிவிட்டு பல பட்டைகள் தீட்டுவார்கள். அதிக ஒளியுள்ள வைரத்தில் 58 பட்டைகள் காணப்படும். அந்தப் பட்டைகளையும் குறிப்பிட்ட அளவும் உருவமும் உடையனவாகவும் ஒன்றுக்கொன்று நேர்கோணமாக அமைக்கப்பட்டனவாகவும் இருக்கும்படி செய்வார்கள். அப்பொழுதுதான் அது கண்ணைப் பறிக்கக்கூடியதாக இருக்கும்.

109அப்பா! இப்பொழுது தந்தியைக் கையால் எழுதாமல் டைப் அடித்து அனுப்புகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?