பக்கம்:தந்தையும் மகளும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தந்தையும்

ஆனால் அமெரிக்காவில் காட்மாய் என்று ஒரு எரிமலை இருக்கிறது. அதன் அடிவாரத்தை ஒட்டி உள்ள பள்ளத்தாக்கில் குழாய்கள் இறக்கினால் அவற்றில் கீழேயிருந்து சூடான நீராவியும் வேறுபல வாயுக்களும் வெளியே வருகின்றன. அந்த நீராவி கீழேயுள்ள எரிமலைக் குழம்பிலிருந்து வருவதால் இரும்பைச் சிவக்கக் காய்ச்சினால் எவ்வளவு சூடு இருக்குமோ அவ்வளவு சூடு இருக்கும். அதனால் மரச்சீவல்களை அதில் இட்டால் நெருப்புப் பற்றிக்கொள்ளுமாம்.

டாக்டர் கிரிக்ஸ் என்பவர் அந்தப் பிரதேசத்தைக் கவனித்து வருவதற்காகச் சென்றார். அவர் ஒரு கொம்பின் முனையைச் சதைத்து வைத்துக்கொண்டு அந்த முனையை ஒரு குழாயினுள் இட்டார். அது புகைந்து கரியாயிற்று, நெருப்புப் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லாததே. அதனால் அவர் கொம்பை வெளியே எடுத்ததும் அது சுடர்விட்டு எரியத் தொடங்கிற்று. ஆனால் நெருப்புப் பற்றும்படி செய்தது நீராவிதான்.

141அப்பா! வெண்மை நிறமான நிலக்கரியும் உண்டு என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! உண்டு. ஆனால் அது உண்மையில் நிலக்கரி அன்று. நிலக்கரி என்பது நெடுங்காலத்துக்கு முன்னிருந்த காடுகள் அழிந்து பூமிக்குள் இருந்து கரியானதாகும். அது அடுப்புக் கரி போலவே கறுப்பு நிறமுடையதாகும். அது சுடர்விடாது, அதிகமாகப் புகையவும் செய்யும்.

ஆனால் வெண்மையான நிலக்கரி என்று கூறுவது பூமியை வெட்டி எடுக்கும் பொருளன்று, மனிதரால் செய்யப்படும் பொருளேயாகும். அதை ரசாயனிகள் மெட்டால்டிஹைட் என்று கூறுவார்கள்.