பக்கம்:தந்தையும் மகளும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தந்தையும்


52அப்பா! வஸ்துக்களைச் சூடாக்கினால் விரியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா ! ஒவ்வொரு வஸ்துவும் கண்ணுக்குத் தெரியாத கோடிக் கணக்கான மூலக்கூறுகளால் ஆனதாகும். அந்த மூலக்கூறுகள் சதா காலமும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நாம் வஸ்துவைச் சூடாக்கினால் என்ன நடக்கிறது? வஸ்துவிலுள்ள மூலக்கூறுகள் முன்னிலும் அதிகமாக அசைய ஆரம்பித்து விடுகின்றன. அதிகமாக அசைய வேண்டுமானால் அவற்றிற்கு அதிகமாக இடம் வேண்டும் அல்லவா? அப்படி அதிகமான இடத்தில் அசைவதால் தான் நாம் வஸ்துவானது சூட்டால் விரிந்து விடுகிறது என்று கூறுகிறோம்.

அதுபோலவே வஸ்துவின் சூட்டைக் குறைத்துக் குளிர்வித்தால் அப்போது மூலக்கூறுகள் அசைவது குறைந்து விடுகிறது. அதனால் அவை அசையும் இடமும் குறைந்து விடுகிறது. அப்போது வஸ்து சுருங்கி விட்டதாகக் கூறுகிறோம்.

53அப்பா! தட்டைக் கழுவி வைத்தால் உலர்ந்து விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! தண்ணீரைக் கொதிக்கவைத்தால் அது ஆவியாக மாறி விடுகிறது என்பதை நீ அறிவாய். ஆனால் தண்ணீர் ஆவியாக மாறுவது அதைக் கொதிக்க வைக்கும் போதுதான் என்று எண்ணாதே. கொதிப்பதற்கு அதிகமான உஷ்ணம் வேண்டும். ஆனால் அப்படி அதிக உஷ்ணம் இல்லாத போதுங்கூடத் தண்ணீர் ஆவியாக மாறவே செய்கிறது. அதனால் தான் நீ கழுவிவைக்கும் தட்டு உலர்ந்து போகிறது. அம்மா! அதிக உஷ்ணம் இருந்தால் ஆவியாக மாறுவது சீக்கிரமாக நடைபெறும். உஷ்ணம் குறைவாயிருந்தால் ஆவியாக மாற நேரமாகும். அவ்வளவுதான் வித்தியாசம்.