பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

110



இவ்வாறு சொன்னதால், ஒரு பெரிய தேசிய எழுச்சியை அவமதிக்கிறார் என்று சொல்லிக் கடுமையாக ஏசினார்கள்; மிரட்டினார்கள்; மொட்டைக் கடிதங்கள் தீட்டினார்கள்; வெள்ளைக்காரர் பாதந்தாங்கி எனப்பட்டம் சூட்டினார்கள் என்னதான் அச்சுறுத்தினாலும், இந்த உப்புக் காய்ச்சும் போரினால், வளைந்து போன குண்டூசியளவு நன்மைகூட இந்தியாவுக்குக் கிடைக்காதென்று, கோபுரத்தின் மீதிருந்தும் கூறுவதாகப் பெரியார் பிரகடனம் செய்தார்! கலந்து கொள்ளாவிட்டாலும், இதைக் கண்டிக்காமலாவது விடலாமே என்று உடனிருந்தோரில் சிலரது முணுமுணுப்பும் அவர் செவிகளில் ஏறவில்லை !

ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடுகளின் தொகுப்பு, 1931 -ஆம் ஆண்டு மே 10,11 நாட்களில் நடைபெற்றது. வரவேற்புக் குழுத்தலைவர் ஆர்.கே. சண்முகம், சுயமரியாதை மாநாட்டுத் தலைவர் எம்.ஆர். ஜெயக்கர், இளைஞர் மாநாட்டுத் தலைவர் நாகர்கோயில் வழக்கறிஞர் பி. சிதம்பரம், பெண்கள் மாநாட்டுத் தலைவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (இவர் தேவதாசி ஒழிப்பு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அரும்பாடு பட்டார். பெரியாரின் முழு ஆதரவு இதற்கு இருந்தது. இதை உடனடியாக நிறைவேற்றித் தராததற்காகப் பெரியார் நீதிக் கட்சியினரைக் கடுமையாகக் கண்டித்து வந்தார்) 1930-ல் மதுவிலக்கு மாநாட்டுத் தலைவர் சிவகங்கை வழக்கறிஞர் எஸ். இராமச்சந்திரன், சங்கீத மாநாட்டுத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சங்கீதப் பேராசிரியர் தஞ்சை கே. பொன்னையா - எனப் பெரியார் ஏற்பாடு செய்தார்.

மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் - இந்து முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப்பட்டோர் - ஒன்றாகக்கூடி அமர்ந்திருப்பதையும், இவர்களனைவருக்கும் உணவு சமைத்துப் பரிமாறுகின்றவர்கள் யாவரும் தாழ்த்தப்பட்டோர் என்பதையும் கண்டு, எம்.ஆர். ஜெயக்கர் என்னும் வடநாட்டு அறிவாளர் மிக்க வியப்பும் மகிழ்வுங்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாய் எந்த மதத் தலைவரும் செய்யாத அருஞ் சாதனைகளைப் பெரியார் ஆற்றியுள்ளதாகப் பாராட்டிப் புகழ்ந்தார். சட்டமன்றம் செல்லவோ, அரசுப்பதவி பெறவோ விரும்பாமல் ஏழை மக்களின் மேம்பாட்டுக்குத் தொண்டு செய்வதே அவரது பிறவிப் பயனாய்க் கருதுவதைப் போற்றினார்.

பெரியார் சில முற்போக்கான தீர்மானங்களைக் கூடுதலாகக் கொணர்ந்து இங்கு இணைத்தார். செங்கற்பட்டுத் தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதோடு, மாதம் 1000 ரூபாய்க்கு மேல் எந்த அரசு அலுவலரும் சம்பளம் பெற இடமிருக்கக்கூடாது என்பது ஒன்றாகும். இது இங்கு நிறைவேறிய பின்னர்தான் காங்கிரஸ் கட்சி