பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வியாசத்தின் விஷயத்திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்குக் கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவதில்லை என்றும் ஏழைகளுக்குக் கல்விபரவ சௌகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெறும் பணக்காரர்களும் அதிகார வர்க்கத்தாரும், உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் சீர்திருத்தப்பட்ட எலக்dஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்று ஏழைப் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதே ஆகும்.

நான் 7, 8 வருஷகாலமாய் சுயமரியாதை இயக்க சமதர்மப் பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது அப்பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக்காகச் செய்யப்படவேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லாரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத் தத்துவத்தின் கருத்தாகும்.

அவ்வியக்க இலட்சியத்திலோ வேலைத் திட்டத்திலோ பிரச்சாரத்திலோ அதற்காக நடைபெறும் “குடி அரசு”ப் பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை, எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம்பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று; எனது பிரசங்கத்தைக் கேட்டாலே தெரியும்.

அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாயிருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரச்சாரம் செய்யும் என்னை எப்படியாவது அடக்க வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால ஆட்சியில் பங்குபெற்று போகபோக்கியம் பதவி அதிகாரம் அடைந்துவரும் பணக்காரர்களும் மதம், சாதி, படிப்பு இவற்றால் முதலாளிகளைப் போல வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாயிருப்பதும் அதிசயமல்ல.

ஏதாவது ஒரு கொள்கை பரவ வேண்டுமானால் இக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் இதற்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டுமென்ற கருத்தில் இவர்கள் வழக்கைக் கொண்டு வந்திருப்பதால் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம் வெறுப்பு பலாத்காரம் இருப்பதாகக் கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படிச்