பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

162


வரிப்பணத்திலிருந்து விருப்பப் பாடமாகவேனும் இந்தி கற்க அவசியமில்லையெனப் பெரியார் வெறுப்பும் தெரிவித்தார். மற்றப் பத்திரிகைகள் எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்த போதிலும், ஆதரவு தெரிவித்து வந்த “மெயில்” ஏட்டுக்குப் பெரியார் தமது நன்றியை, 25-ஆம் தேதி “குடி அரசு” அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை ராயப்பேட்டையில் நீதிக்கட்சியின் தலைமை அலுவலகத்தை 1940 பிப்ரவரி 4-ஆம் நாள் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். பிரிட்டிஷ் அரசு அவரை லண்டனில் இந்தியா மந்திரி ஆலோசகராக நியமித்திருந்தது. பெரியார் அளவற்ற மகிழ்ச்சியுடன் அவரைப் பாராட்டினார். லண்டன் புறப்படுமுன் தமிழ் நாடெங்கும் அவருக்கு வழியனுப்பு விழாக்கள் சிறப்புடன் நடைபெற்றன. ஆனால் அந்தோ! அவர் புறப்பட்டுச் சென்ற ஹனிபால் என்ற விமானம் மார்ச் 1-ஆம் நாள் காணாமல் போய்விட்டதாக ஒரு செய்தி வந்தது. இதுவரையில் அது என்ன ஆயிற்று என்பதைக் கண்டறிய முடியாத ஒரு மர்மமாகவே அது போய்விட்டது. தமது துணைவியார் நாகம்மையார், தமது தாயார் சின்னத்தாயம்மையார், தமது அண்ணன் மகன் லண்டனில் படித்த ரங்கராம் ஆகியோர் மறைந்த போதும் கண்ணீர் சிந்தாத பெரியார், தமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாயிருந்தவரும், ஓயாத உழைப்பாளரும், தம்மிடம் களங்கமற்ற அன்பும் விசுவாசமும் கொண்டவருமான பன்னீர்செல்வம் மறைவுக்குக் கலங்கிக் கதறி, முதன் முறையாகக் கண்ணீர் வடித்தார்! அவருக்குக் கிடைத்த பதவி, சர்க்கரை தடவிய நஞ்சு உருண்டை குத்திய தாண்டில் முள்ளாகவும், பன்னீர்செல்வம் அத்தூண்டிலில் சிக்கிய மீனாகவும் ஆன நிலையினை எண்ணி எண்ணி மனம் குமைந்தார் பெரியார்! ஏப்ரல் 2-ஆம் நாள் பன்னீர்செல்வம் மறைவுக்குத் துக்க நாள் என்று அறிக்கை வெளியிட்டார். ஏப்ரல் 7-ஆம் நாள் கோவையில், என். ஆர். சாமியப்பா, பா. தாவுத்ஷா, சர் அ. முத்தையா செட்டியார் ஆகியோர் பங்கேற்ற நீதிக்கட்சி மாநாட்டு அரங்கிற்குப் பன்னீர் செல்வம் பெயரைச் சூட்டினார் பெரியார்!

இதற்கிடையில் ஜனாப் ஜின்னா, அதுகாறும் இஸ்லாமியக் கலாச்சாரப் பாதுகாப்பு, உத்தியோக உரிமை கோருதல் ஆகியவற்றுக்காக நிறுவப்பட்ட முஸ்லிம் லீக்கின் சார்பில், 1940 மார்ச் திங்களில் முதன் முதலாகத் தமது பாகிஸ்தான் என்னும் தனி நாடு கோரிக்கையைப் பிரகடனம் செய்திருந்தார். பெரியார் அதனை முழுமையாக வரவேற்று, மார்ச் 11-ஆம் நாள் “குடி அரசு” தலையங்கம் தீட்டினார். பின்னர் ஜுன் 6-ஆம் நாள் காஞ்சியில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டை ஒட்டி, ஜின்னா பெரியாருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்த மாநாடு திராவிட நாடு தனி ஸ்டேட்