பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

194


எப்போதும் கருப்புச் சட்டை அணிய வேண்டும்; வெள்ளைச் சட்டையணியும் குள்ள நரிகள் எனக்கு வேண்டாம் - என்று பெரியார் சொன்னதில், அண்ணாவும் வேறு சிலரும் மனத்தாங்கலுடனிருந்தனர். ஆகஸ்ட் 15 புதிய விரிசலை உண்டாக்கியது.

செப்டம்பர் 14-ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டில், திரு.வி.க. கலந்து கொண்டு திராவிட நாடு திராவிடருக்கே என்று முழங்கிய அற்புத மாறுதலைத் தமிழகம் கண்டது ஆயினும், அண்ணாவின் உள்ளம் அமைதியை இழந்திருந்தது. பெரியார் செயல்களில் அண்ணா ஏதோ குறை உணரத் தொடங்கினார். இதற்கு மேலும் உரமூட்டுவது போல், கரூர் வழக்கு நிதி அமைந்தது. நெசவாளர் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் கழகத் தோழர்கள் சுமார் 100 பேர்மீது காங்கிரஸ் அரசு கடுமையான விதிகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்தது. பெரியார். அவர்களை ஆதரித்துக் காப்பாற்றவில்லை என்பதாகக் கூறி அண்ணா , திருச்சியில், தமது நீதிதேவன் மயக்கம் போன்ற நாடகங்கள் வாயிலாய் நிதி திரட்டி உதவினார்.

உடையர்பாளையம் வேலாயுதம் என்கிற ஒரு பள்ளி ஆசிரியர் கழகப் பிரச்சாரம் செய்தார் என்ற காரணத்துக்காகக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிடப்பட்டது. 1947 நவம்பரில்தான்!

ஏ.பி. சனார்த்தனம் “தோழன்” என்றொரு திங்களிதழ் தொடங்கினார். “அவரை நம்பலாம்” என்று பெரியார் 1-11-47-ல் நற்சான்றிதழ் வழங்கினார். இவர்தாம் பெரியாரில் பெரியார் என்றார் பட்டுக்கோட்டை அழகர்சாமி, அப்போது பெரியாரைப் பற்றி!

வால்மீகி ராமாயணத்தைப் பெரியார் மிக நுணுக்கமாக ஆராய்ந்து தெளிந்தவர். அந்த ஆதி காவியத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்த கம்பனுக்கு, என்ன அவசியம் வந்ததோ தெரியவில்லை - அதில் உள்ள சாமான்ய மனிதர்களையெல்லாம் தெய்வங்களாகப் படைத்து உலவ விட்டான். கம்பராமாயணம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதால் கிடைத்ததைவிடப், பக்தி மார்க்க நூல் ஆண்டவன் அவதார மகிமை கூறும் இதிகாசம் என்பதால் கிடைக்கும் பெருமையே அதிகம். எனவேதான் கம்பன் தமிழ்க் கவிஞனென்கின்ற தயவு தாட்சண்யம் பாராமல் பெரியார் கண்டித்தார். மேலும், நாடகம், தெருக்கூத்துகள் வாயிலாகவே இராமாயணம் அதிகமாகப் பரவியிருப்பதால், அதே வழியைக் கையாண்டு, வான்மீகிப் படைப்பின்படி இராமாயணப் பாத்திரத்தைச் சிருஷ்டித்து, நாடகமாக நடத்த விரும்பிய பெரியார், உண்மை இராமாயணம் என்னும் பெயரில், நாடக உருவில், தொடர்ந்து “குடி அரசு” இதழில் எழுதி வந்தார்.