பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



கஷ்டப்படும் மக்களின் துன்பத்தை நீக்கி, அவர்கள் அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றை அடைவதற்குள்ள தடைகளை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பது தவிரக், கடவுள், மதம் இவைகளைப் பற்றித் தமக்குச் சிறிதும் கவலையில்லை என்றார் பெரியார். விஞ்ஞான ஆராய்ச்சி வளராத காலத்தில் அறிவுக்கு எட்டாத விஷயங்களைக் கடவுள் செயல் என்று மனிதன் நம்பினான். கடவுள் இல்லை என்று நாத்திகராகிய நாம் கூற முடிகிறதே, இது எப்படி? மதம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தரகர்களை ஏற்படுத்தத்தான் உதவிற்று மனிதனுக்குத் தானே சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவு மிகுதியாக இருக்கும்போது, ஏன் கடவுள் என்பதாக ஒன்று தேவைப்படுகிறது? ஆத்மாமீது நம்பிக்கை போனால் கடவுள் நம்பிக்கையும் தானாகவே போய் விடுமே! கடவுளை நம்புகிறவர்களைவிட நம்பாதவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்? - என்று இப்படிப்பட்ட உயர்ந்த வகையான பிரகிருதிவாதம், தத்துவ விளக்கங்களையெல்லாம் மிகச் சாதாரணப் படிப்புள்ள படிப்பில்லாத- பாமர மக்களுக்கும் விளங்குமாறு பெரியார் எடுத்து வைத்து உதாரணங்களுடன் உரைத்து வந்தார்.

கோவை மாவட்ட ஏழாவது திராவிடர் கழக மாநாடு 1949 மே 28-ஆம் நாள் கோயமுத்தூரில் நடைபெற்றது. தி. பொ. வேதாசலம் தலைமையில், அண்ணா திறந்து வைக்க, மூவலூர் இராமாமிர்தத் தம்மையார் கொடி உயர்த்தினார். “கடந்த ஆண்டு அக்டோபரில், ஈரோடு மாநாட்டில், அண்ணாவிடம் பெட்டிச் சாவி தரப் போவதாகக் கூறினீர்களளே! அப்படியிருக்க, அவருக்கும் தெரியாமல் திருவண்ணாமலையில் ஆச்சாரியாரைச் சந்தித்த மர்மம் என்ன? அங்கு பேசிய ரகசியம் என்ன?” என்று பெரியாரை ஜி.டி. நாயுடு வினவினார். ஆனால் பெரியார் அங்கு எந்த விவரத்தையும் கூற விரும்பவில்லை . ஐயமும், திகைப்பும், ஆத்திரமும் பலருடைய முகங்களில் பிரதிபலித்தன; பலனேதுமில்லை !

ஓமந்தூராருக்குத் தாம் இளைத்தவரில்லை எனக் குமாரசாமி ராஜா காட்டிக் கொண்டார். “திராவிட நாடு“ இதழுக்கு ஜாமீனாக மூவாயிரம் ரூபாய் 3.6.49 அன்றும், ”விடுதலை”ஏட்டுக்கு ஜாமீனாகப் பத்தாயிரம் ரூபாய் 18.6.49 அன்றும், “குடி அரசு” இதழுக்கு ஜாமீனாக மூவாயிரம் ரூபாய் 2.7.49 அன்றும், கேட்கப்பட்டன!

இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திடத் தமக்கு நம்பிக்கையுள்ளவராக ஒரு வாரிசு வேண்டுமென்றும், சொத்துப் பாதுகாப்புக்கும் ஏற்பாடு ஒன்று செய்யப்பட வேண்டும் என்றும், பெரியார் கூறிவந்ததற்கிணங்க, 1949 ஜூன் 9-ஆம் நாள் சென்னை தியாகராய நகர் செ.தெ. நாயகம் இல்லத்தில் மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தடுத்து நிறுத்திட கே.கே. நீலமேகம், என்.-