பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நீண்ட காலமாக நடக்கிறது. ஆரியக் கலாச்சாரத்தைப் பவுத்தர்கள் முயன்றும் அழிக்க முடியவில்லை ; மொகலாயர் முயன்றும் முடியவில்லை; இந்தக் கழகத்தாரால்தானா முடியப் போகிறது? என்று மமதையுடன் ஆரியம் மார் தட்டுகிறது! இளைஞர்கள் எழுச்சியினால் கழகம் கட்டாயம் செய்து காட்டும் என்றார். மேலும், குடி அரசு நாள் பற்றிப் பேசுகையில், இது வெள்ளையனுக்கு லஞ்சம் கொடுத்து, அவன் சுரண்டலுக்கு நிரந்தர வசதி செய்து கொடுத்துத், தங்கள் பேருக்கு மாற்றிக் கொள்ளப்பட்ட மேடோவர் ஆட்சிதான்! - என்றும் குறிப்பிட்டார் பெரியார்.

கான்பூரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குப் பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். உடல் நிலை இடந்தராததால் செல்ல இயலவில்லை . அன்று 29.1.50-ல் கடலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சனவரி 26, தடியாட்சி நாள் என்பதுதான் உண்மை, என்பதாக ஆதாரங்களுடன் விளக்கினார்.

1950 பிப்ரவரி 4-ஆம் நாள் பெரியாரின் தமையனார் ஈ. வெ. கிருஷ்ணசாமி - வைத்திய வள்ளல் - தமது 74-ஆவது வயதில் காலமானார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுதாபக் கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு, அவர் தமது தமையனார் என்பதற்காகவோ, செல்வந்தர் என்பதற்காகவோ அல்லாமல்; தமக்கென வாழாமல் சித்த மருத்துவம் இலவசமாகத் தினம் 100, 150 பேருக்குக் குறையாமல் செய்தும், பொதுத் தொண்டில் ஈடுபட்டும், வாழ்ந்து வந்ததால்தான். இன்று பலராலும் பாராட்டப்படுகிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். பம்பாய் சென்று 11, 12 தேதிகளில் அங்கு திராவிடர் கழக இரண்டாவது மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார்.

இச்சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியினை அடக்கி ஒடுக்கிட அரசு மிகத் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தது. முக்கிய மானவர்கள் தலைமறைவானதால், கிடைத்தவர்களைச் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தனர்; பலரை வேட்டையாடி ஒழித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத் தோழர்கள் மிகக் கடுமையான அடக்கு முறைக்கு ஆளாயினர். “தஞ்சை மாவட்டத்தில் தடியடி ஆட்சி” என்று பெரியார் “விடுதலை”யில் ஒரு தலையங்கமே எழுதினார். மேலும், தமிழகத்தையே உலுக்கி விட்ட கொலை வெறியாட்டம் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைத் தேடித் தந்தது. அதாவது, சேலம் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுக் கைதிகளை, உள்ளே வைத்தவாறே. 15.2.50 அன்று, போலீசார் துப்பாக்கியால் சுட்டு, 22 பேர் மரணமடையவும், 100 பேர் படுகாயமடையவும் நேரிட்டது. மார்ச் 5-ஆம் நாளன்று இதற்குத் திராவிடர் கழகம் கண்டன நாள் கொண்டாடுமாறு பெரியார் கேட்டுக் கொண்டார்.