பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 தன்னை நோக்கியே தவிர, வேறு யாரை நோக்கியும் அல்ல என்றார் ஆச்சாரியார். அது நூற்றுக்கு நூறு மெய்தான் என்றார் பெரியாரும்.

50 ஆண்டுகட்கு முன் பெரியார், வீட்டைத் துறந்து, காசி வரை சென்றாரல்லவா? அதற்குக் காரணமே தந்தையார் வெங்கட்ட நாயக்கர் அவரைக் கோபித்துக் கொண்டதுதான்! தனது மானத்துக்கு இழுக்காக மகன் கைமாற்று வாங்கியதால் கோபம் கொண்டார். இராமசாமி ஏன் கடன் வாங்கினார்? ஈரோடு சிதம்பரனார் பூங்கா அருகில் இப்போதும் 30 ஏக்கர் பூமி மிகவும் மதிப்புள்ள சொத்தாக விளங்குகிறது. இது அப்போது 3000 ரூபாய்க்கு மலிவாக விலைக்கு வந்தது. இதை வாங்கிப் போடலாமா என்று கேட்டதற்குத் தந்தை பண விரயம் எனக் கூறி மறுத்தார். செல்வக் குமார முதலியார் என்பவரிடம் கடன்பெற்று. நிலத்தை வாங்கித் தந்தை பெயருக்கே சாசனம் செய்தார் இராமசாமி. இப்போது அந்தச் சொந்த இடத்திலேயே பிரம்மாண்டமான பந்தல் அமைத்து, ஆச்சாரியார் கல்வித் திட்ட மாநாடு 1954 சனவரி 24-ஆம் நாளும், புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாடு 23-ஆம் நாளும் நடைபெற ஆவன செய்தார் பெரியார். ஈரோட்டில் மக்கள் வெள்ளமாய்த் திரண்டனர். புத்தர் மாநாட்டு வரவேற்புக் குழுவுக்குத் தலைவர் தி.பொ.வேதாசலம், செயலாளர் சேலம் கே.ராஜாராம். தலைமை ஏற்றிட சிலோனிலிருந்து புத்தர் கொள்கை வித்தகரான டாக்டர் ஜி.டி. மல்லலசேகராகவும், மாநாட்டைத் திறந்து வைக்க டாக்டர் அம்பேத்காரின் தளபதியான பி.என். ராஜ்போஜ் எம்.பி.யும் வந்தனர். 23.1.54 காலை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வில்லுப் பாட்டும், இரவு எம்.ஆர். ராதாவின் நாடகமும், 24-ந் தேதி காலை ராதா தலைமையில் மாபெரும் ஊர்வலம். கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் குருசாமி, செயலாளர் டி.வி. டேவிஸ், மாநாட்டுக்குத் தலைமை தாங்கிட டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜமும், திறந்து வைத்திடத் தினத்தந்தி உரிமையாளர் சி.பா. ஆதித்தனும் வந்திருந்தனர். பெரியாரின் பேரூரை இரு நாட்களும்! ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால், பள்ளிக்கு வந்து கொண்டிருந்த இளம் மாணவர்களில் 50 சதவீதமும், மாணவிகளில் 70 சதவீதமும் படிப்பை நிறுத்திவிட்ட மனம் பதறும் புள்ளி விவரத்தைப் பெரியார் வெளியிட்டார்.

“நமது கொள்கைதான் புத்தரின் கொள்கை என்று டாக்டர் மல்லலசேகராவே சொல்லிவிட்டார். உலக புத்த ஐக்கிய சங்கம் போன்ற 53 சங்கங்களின் தலைவர் அவர். நமது இந்திய சர்க்காரும் புத்தருடைய தர்ம சக்கரத்தைக் கொடியிலும், அசோக ஸ்தூபியை சின்னத்திலும் வைத்துள்ளது. புத்தர் பிறந்த நாள் அரசு விடுமுறை விடுகிறார்கள். ஆனால் இந்து மதத்துக்கு விரோதமாக பக்கர் சொன்னவைகளை ஏற்றுக் கொள்வார்களா? நாம்தான் எடுத்துக்காட்ட