பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

336


கண்டுங் காணாமல் இருக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பும் போய்விட்டதே - என்று, பெரியார் ஆதாரங் காட்டினார். எலெக்ஷன் முடிந்ததால், இனி தாம் வர்ணாசிரம தர்ம எதிர்ப்புப் பிரச்சார நிறுவனம் ஒன்று துவக்கி, வங்கப் பணிகளைத் தீவிரப்படுத்தப் போவுதாகவும், இதில் கண்ணீர்த் துளிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர் ஆகிய கட்சியினரும் மற்றும் வடநாட்டார், சினிமாக்காரர்கள், அதிகாரிகள் ஆகிய மக்களும்-யாரும் சேரலாம் என்றும் பெரியார் பரந்த மனப்போக்கில் அழைத்திருந்தார்.

ஒன்பதே மந்திரிகள் கொண்ட - இந்தியாவிலேயே மிகச் சிறிய மந்திரி சபையைக் காமராசர் 15.3.62 அன்று அமைத்திருந்தார். இதற்காகவும் பெரியார், தாம் காமராஜர் ஆட்சியை ஆதரிப்பதாக எழுதினார். விலைவாசியை அரசு குறைக்க ஆரம்பித்தால் அது உற்பத்தியைத்தான் பாதிக்கும்; விளைபொருள்கள் பெருகுவதைத் தடுக்கும் என்று பெரியார் புள்ளி விவரங்களுடன் அரசினர்க்கு ஆலோசனை வழங்கினார். சில இடங்களில் கழகத் தோழர்களைப் பழி வாங்குவது போலப் போலீசார் நடந்து வருவதை எடுத்துக்காட்டி, இடித்துக் கூறும்போது - “போலீசு இலாக்கா பழி வாங்குகிறதா? - இதற்குமேல் எழுதக் கை ஓடினாலும் மனம் ஓடவில்லை” என்று முடிகின்ற துணைத் தலையங்கக் கட்டுரையைப் பெரியாரே 19.3.62 “விடுதலை” ஏட்டில் எழுதினார்.

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டுப் பெரியார் 8.4.62 முதல், சுற்றுப் பிரயாணத்தை மீண்டும் தொடங்கினார். ஏறத்தாழ மார்ச் மாதம் முழுவதுமே படுக்கையிலிருந்தவர் 31-ஆம் நாள் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் தலைமை ஏற்றுப் பேசினார். ஈ. வி. சரோஜாவின் நாட்டியம்; டாக்டர் ரத்தினவேல் சுப்ரமணியம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி நன்கொடைக்காக! பெரியாரே இதற்கு 500 ரூபாய் அன்புடன் வழங்கினார். ஏப்ரல் மாதம் முழுவதும் பெரியார் தனியாகவே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். வீரமணி ஆங்காங்கு கலந்து கொண்டார். 15ந் தேதி தென்பகுதி ரயில்வே தொழிலாளர் விருந்து, மாநாடு இவற்றில் பெரியார் மகிழ்வோடு பங்கு பெற்றார். 14.4.62 சிதம்பரத்தில் ஜனார்த்தனன் - கிருஷ்ணா ஆகியோரின் கலப்புத் திருமணத்தைப் பெரியார் நடத்தி வைத்தார். பெரியோர்கள் சம்மதமில்லாமல் நடைபெற்றதாகப் பின்னர் அறிந்தும் - ஒன்றும் தவறில்லை, வயது வந்து, விவரம் புரிந்தவர்கள்தான். மணமகனின் தந்தை திருச்சி வீரப்பா நமது இயக்க முன்னோடியல்லவா? என்று பெரியார் சமாதானப் படுத்திக் கொண்டார்.

காமராசருக்கே துரோகம் செய்வோரும், காங்கிரசில் பிடிப்பில்லாமல் அக்கறையற்று இருப்போரும் மிகுந்து விட்டனர். கண்ணீர் துளிகள் ஆச்சாரியாருடன் கூடிக் குலவுகின்றனர். பிரிவினை