பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



சென்னை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அண்ணாவைக் கலைஞர் சந்தித்துச் செய்தி கூறவே, அவரும் மனமுடைந்து, கலைஞர் வாயிலாகத் தமது எல்லையற்ற துயரை இயம்பினார். பெரியார், சேவத்தில் கழகச் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், 29.5.64 அன்று, தமது அனுதாப உரையைக் கண்ணீரோடு கலந்துரைத்தார். “கேட்டவுடன் பெரும் அதிர்ச்சியும் தாள முடியாத துக்கமும் அடைந்தேன். பிரதமர் நேரு அவர்களை இழந்ததன் மூலம் நாட்டில் பரிகரிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. அவர் விட்டுக் சென்ற காரியம் நிறைவேறுமா என்று எண்ணிப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இனிநாள் என்ன செய்வேன்? நமது தொண்டுதான் அவரும் செய்கிறார் என்று கண்ணை மூடிக்கொண்டு அவரது கட்சியை ஆதரித்தேன். பொது மக்களாகிய நீங்கள் இனியும்: காங்கிரசை ஆதரித்து, அவர் விட்டுச் சென்ற காரியம் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார் பெரியார். நேரு மறைவில் கூட ஆகாசவாணி, அக்கிரகார வாணியாகப் பணியாற்றியது. நேருவைக் கேலி செய்து பேசிய ராஜாஜிக்குதான் வானொலியில் இரங்கலுரையாற்றும் வாய்ப்புத் தரப்பட்டது. நேருவின் உடலுக்குப் பேரன் சஞ்சய் எரியூட்டினார். இடைக்காலப் பிரதமராக நந்தா பொறுப்பேற்றார். நேருவின் உயிலைச் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் நாட்டுக்கு அறிவித்தார். மூடநம்பிக்கையற்ற பகுத்தறிவு வாதியான நேரு, “நான் இயற்கையை ரசிப்பவன் ஆதலால் கையளவு சாம்பலைக் கங்கையில் கரைக்கவும். மிகுதியாக உழவர் உழைக்கும் வயலில் போடவும். எனக்கு எத்தகைய மதச் சடங்குகளிலும் நம்பிக்கை கிடையாது“ என்றார் 31.5.64 சென்னை கடற்கரையில் நடத்திய அனுதாபக் கூட்டத்தில் பெரியார், ”நேரு பகுத்தறிவு வாதி. புத்தருக்குப் பின் தோன்றிய தத்துவ ஞானி“ என்று புகழ்ந்தார். ”விடுதலை"யில் ‘பகுத்தறிவுவாதி நேரு' என்ற தலைப்பில் தினமும் ஒரு பெட்டிச் செய்தி. அவரது கருத்துகளைத் தாங்கிப் பல நாள் வரிசைபட வெளியிடப்பட்டு வந்தது. நில உச்சவரம்புச் சட்டத்தைச் செல்லுபடியாக்கிட, அரசியல் சட்டத் திருத்தம், 19-வது திருத்த மசோதாவை, நாடாளுமன்றம் நிறைவேற்றித் தந்தது.

“விடுதலை” ஏட்டின் வெள்ளிவிழா 6.6.64 அன்று. ஓராண்டுக்குள் 5,000 சந்தாக்களாவது சேர்க்கப்பட்டால் தான், அதில் ஏற்பட்டுவரும் நட்டத்தைச் சரிகட்ட முடியும் என்றும், அதிலும் 2,500 சந்தா அடுத்த 2 மாதத்திற்குள் தேவை என்றும், வீரமணியின் தொண்டுகளைச் சிறப்பித்தும் பெரியார் எழுதினார். அரசு விளம்பரங்களோ, பிற விளம்பரங்களோ ”விடுதலை" யில் வருவதில்லை. மாதம் இரண்டொரு சினிமா விளம்பரங்கள் வந்தன. லால் குடி வட்டம் பெருவளப்பூரில் பெரியாரின் எடைக்குச் சரியாக மிளகாய் அன்பளிப்பாக வழங்கி-