பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

373


1.1.65 அன்று முதல்வரிடம் வழங்கினார். துர்காபூரில் அகில இந்தியக் காங்கிரசுக்குக் காமராசர் தலைமை தாங்கித் தமிழில் உரையாற்றினார். அதன் ஆங்கிலமொழி பெயர்ப்பு, உறுப்பினர்களுக்கு அச்சிட்டு வழங்கப்பட்டது. கேளம்பாக்கம் சுயமரியாதை இயக்கப் பெரியவர் வி. தி. பொன்னுசாமி, தமது 65ம் வயதில், 10.1.65 அன்று இயற்கை எய்தினார். தமது மூன்று பெண்களையும் வெவ்வேறு சாதி மாப்பிள்ளைகளாகத் தேடிக் கொடுத்துச் சாதி ஒழித்த தன்மான வீரர் இவரது மூத்த மருமகன் டார்ப்பிடோ ஜனார்த்தனம்!

“விடுதலை” பொங்கல் மலரில் “பெரியார் அகராதி" ஒன்று புதுமையுடன் பொலிந்தது. தெரிந்து கொள்ள வேண்டிய, அர்த்தமுள்ள சொற்களாகிய அவை, வருமாறு:- அரசியல் - பித்தலாட்டக்காரர்களின் பிழைப்பு, ஆத்மா. அயோக்கியர்களின் கண்டுபிடிப்பு-மன்னிப்புக்கு அப்பாற்பட்டது, இராமாயணம் - பார்ப்பனரின் புரோசீஜர் கோட், கற்பு- பெண்ணடிமை ஆயுதம், சாதி - மனிதனை மனிதன் இழிவு படுத்துவது, சமயம் சாதிக்கு வித்து, கடவுள்-சமயத்தின் காவலன், பார்ப்பான்· இம் மூன்றையும் படைத்த கர்த்தா, குருக்கள்-மோட்சலோகக் கைகாட்டி, கோயில் -அறிவு பணம் இரண்டையும் இழக்கும் இடம், சத்தியாக்கிரகம் - சண்டித்தனம், உண்ணாவிரதம்-தற்கொலைக் குற்றமுள்ள நோய், தியாகம் - அர்த்தமில்லாச் சொல், சோதிடம் - சோம்பேறிகள் மூலதனம், புராணங்கள்-புளுகு மூட்டைகள், புலவர்கள் - பழைமைக் குட்டையில் படிந்து ஊறிய பாசி, மோட்சம்-முடிச்சுமாறிகளின் புரட்டு, உற்சவம் - கண்ணடிக்கும் கான்பரன்ஸ், வக்கீல் - சேலைகட்டாத தாசி, வியாபாரி - நாணயமற்ற லாப வேட்டைக்காரர் எப்படி?

சம்பத்தின் “தமிழ்ச் செய்தி” ஏட்டின் பொங்கல் மலரில் “தமிழ் ஒரு நியூசென்ஸ், தமிழ்ப் புலவர்கள் சமூக துரோகிகள்“ என்று பெரியார், புதிதாகக் கட்டுரை ஒன்று வழங்கியிருந்தார். தமிழ்ப் புலவர்களும் பண்டிதர்களும் தமிழ்க் கலைஞர்கள்தான்! அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாதவாறு புராண இதிகாச நூல்களையே திரும்பத் திரும்பப் புகுத்தி வந்தார்கள். தமிழ் மொழியால் மக்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட எதுவுமே செய்யவில்லை - என்று கடுமையாகச் சாடியிருந்தார். அதேபோல, மதுரை நெடுமாறனின் “குறிஞ்சி” இதழில் சில கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார் பெரியார், அதன் பொங்கல் சிறப்பு மலரில்! மாணவர் அமைதியின்மைக்குக் காரணமென்ன என்ற வினாவுக்கு விடையளிக்க வந்த பெரியார்-அரசாங்கத்தின் பலவீனமும் தாட்சண்யமும் நம் மாணவர்களிடையே கட்டுப்பாடின்மையும் காலித்தனமும் பெருகுவதற்குக் காரணம் - என்றார். அதேபோலப்