பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

401


போன்ற கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணியில் உறுதியுடன் நின்றன.

நேரு மறைந்த பின்னர், காமராசரும் மாநில ஆட்சியை விட்டு விலகிப் போன பின்னர், பெரியாருக்குக் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை. எனினும், தம்மை நம்பியவரை நட்டாற்றில் விட மனமின்றித் தமக்கு நேரிட்ட ஏமாற்றங்களையும் அவமதிப்பையும் பொருட்படுத்தாமல், 1967 தேர்தலிலும் காங்கிரசுக்காகப் பிரச்சாரம் செய்து விடுவது என்ற முடிவில், தம்மைத் தாமே அடிக்கடி தேற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும், சலிப்பும், தளர்வும் பெரியாருக்கு நேரிட்டு வந்தன. தனிப்பட்ட முறையில், காமராசரைத் தவிர, பெரியாரிடத்தில் கனிவோடு நடந்து கொண்ட காங்கிரஸ் மந்திரிகள் வேறு எவருமிலர் பார்ப்பனரல்லாத சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களிலும், இனவுணர்வு படைத்த மிகச் சிலரே, பெரியாரை மதித்துப் போற்றியவர். ஆட்சியிலுள்ள அதிகாரிகளிலும், பார்ப்பனரல்லாதாரும்கூடப் பெரியாரிடம் அணுக அஞ்சியே ஒதுங்கினர். அரசியல் ரீதியாகவும், தங்களுக்கு என்றே முழு நேரப் பிரச்சாரம் செய்து வரும் திராவிடர் கழகத்தைக் காங்கிரஸ் கட்சியோ, கட்சிச் சார்பான ஏடுகளோ அங்கீகரிப்பதில்லை. மாறாகத், தாக்கிய சம்பவங்கள் உண்டு அரசு விளம்பரம், செய்தி முதலியவை “விடுதலை” க்குத் தரப்பட்டதே கிடையாது! இன மானங்காக்கும் ஒரே இலட்சியத்துக்காகப் பெரியார் இந்தத் தடவையும் காங்கிரசை ஆதரித்தார், மனப்பூர்வமாக!

17.9.1966 பெரியார் 87 ஆண்டுகளைக் கடந்து 88ல் பொன்னடி பதித்திடும் நாள். வழக்கம் போல் கழகத் தோழர்களுக்குப் பெரியார் தமது பிறந்தநாள் செய்தி ஒன்றை அருளினார்:- "எனக்கு இன்று 88-ஆம் ஆண்டு பிறக்கிறது. நான் பேராசைக்காரனாக இல்லாமல், இயற்கையை ஓரளவுக்காவது உணர்ந்தவனாக இருப்பவன். ஆனால் உங்கள் எல்லாரிடமும் முடிவுப் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியவன் ஆவேன். அது மாத்திரமல்லாமல் நான் சிறிதளவு பகுத்தறிவு உடையவனாக இருந்தால் என் வாழ்வில் எனது லட்சியத்தில் முழுத் திருப்தியடைந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியவனாவேன். என் உடலைப் பற்றிய எவ்விதக் கவலையும் இன்றி, நேர்ந்தபடி நடந்து, கிடைத்ததை எல்லாம் நேர்கூறு இன்றி உண்டு, அனுபவித்து வந்த நான், 87 ஆண்டு முடிந்து 88-ம் வயதில் புகுகிறேன் என்ற அதிசயத்தை நினைத்துத்தான், இனிமேலும் வாழ ஆசைப்படுவது பேராசை என்று குறிப்பிட்டேன்.

அது போலவேதான். ஒரு சார்பும் இல்லாதவனாகத் தனித்து, எந்த ஓர் ஆதரவும் அற்றவனாகி, என்னையே எண்ணி நின்று, பாமர மக்கள், படித்தவர்கள், பிறவி ஆதிக்கக்காரர்களாகிய பார்ப்பனர்கள்,