பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

405


போல, மலம் பூச்சி புழு முதலிய அசிங்கத்தை மாடு சாப்பிடுவதில்லை! ஆதலால் மாடு வதை கூடாது என்பது ஒரு நாளும் அறிவுடைமை ஆகாது. அதை வலியுறுத்துகிறவர்கள் யாராயிருந்தாலும், அரசாங்கமானாலும், அவர்கள் மரியாதையாய் வேறு நாட்டிற்குப் போய் விடுவதே மானமுள்ள காரியமாகும்." (விடுதலை 17.10.1966)

டெல்லியில் உள்துறை அமைச்சரான நந்தா, பெரியார் கூற்றுப்படி ஒரு சரியான அழுக்கு மூட்டை. சோதிடப் பித்தர். சாது சந்நியாசிகளின் அடிமை. இவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர். நிறைவேறாத ஏக்கம் மிகுந்தவர். இவரது ஆதரவு பூரிசங்கராச்சாரிக்கு இருந்தது போலும்! 6.11.66 “விடுதலை“ தலையங்கத்தில் பெரியார் இந்த போலிச் சாதுக்களின் போக்கிரித்தனத்தைக் கண்டித்துப் 'பார்ப்பனர்களே இப்போது நாட்டில் அராஜகத்தைத் தூண்டுகிறார்கள். இனி அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றெல்லாம் பேசி வருகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் இனி மந்திரிகளைத் தாக்கிக் கொல்ல வேண்டியதுதான் பாக்கி என்னும் விதத்தில், காலித்தனங்களையும் வன்முறைகளையும் செய்கிறார்கள். எச்சரிக்கையாயிருக்க வேண்டும்” என்று எழுதினார்.

7.11.66 அன்று டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இந்து மத வெறியர்களால் நடத்தப்பட்டது. பூரி, சிருங்கேரி மட சங்கராச்சாரியார்கள் தலைமை ஏற்றார்கள். சாதுக்கள், சந்நியாசிகள் எனப்படுவோர், பல்லாயிரக் கணக்கில் திரண்டார்கள். பசுவதை கூடாது என்று கூறி, மனித வதையில் இவர்கள் இறங்கினார்கள்! ஆர்ப்பாட்டத்தில், வழக்கம் போல் சம்பந்தமில்லாத காலிகளும் இறங்கினார்கள். போலீசார் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை . குண்டுக்குச் சிலர் இரையானார்கள். பல வீடுகள் தீக்கிரையாயின.

இந்த அமளி நடந்தபோது காமராஜர் தமது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். காலிகள் திட்டமிட்டு அவர் இல்லத்தைத் தாக்கியதோடு, நாற்புறமும் சூழ்ந்து நெருப்பும் வைத்து விட்டனர். கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு காமராஜர் தப்பிப் பிழைக்க உதவியவர் கோதண்டபாணி என்னும், திராவிட முன்னேற்றக் கழகத் தமிழ்த் தோழர் ஒருவராவார்!

இந்தக் காலித் தனத்தைக் கண்டு உண்மையிலேயே பெரியார் மிகவும் மனம் பதறிப், பதைத்துப் போனார். 15.11.1966 “விடுதலை”யில் தீவிரமான ஓர் அறிக்கை வெளியிட்டார் பெரியார்.

"இந்தியா முழுவதிலுமிருந்து பார்ப்பன சாதுக்கள், சந்நியாசிகள் ஆயிரக்கணக்கில் டெல்லியில் கூடிக் கலவரம் செய்திருக்கிறார்கள். பசுவதை தடுத்தல் என்பது பொய்யான ஒரு காரணமேயாகம்.