பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

435


சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கம் அல்ல. மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டு வந்து முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பாடுபடும் இயக்கமாகும் சுயமரியாதை இயக்கம். பகுத்தறிவு இயக்கம் தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக் கொண்டது.

பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள், பகுத்தறிவால்தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முடியும். அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றப் படவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறோம். சுயமரியாதை இயக்கம் வளர்ந்து வளர்ந்து, பெண்ணுரிமையைப் பெற்றிருக்கிறது. ஆலயங்களில் நுழையும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இன்னும் பல உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழர்களின் குடும்பங்களில் பல சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தியிருக்கின்றன. சட்டப்படி செல்லாது என்று தெரிந்தும் அதனால் ஏற்படும் தொல்லைகளைப் பொருட்படுத்தாது, மக்களுக்காகத் தானே சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நமது வணக்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்!

எங்களது ஆட்சியில், விரைவில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படிச் செல்லத்தக்கதாக்கச் சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களும் சட்டப்படிச் செல்லத்தக்கதாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம், பெரியாரவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நெடுந் தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன் தன் தந்தைக்கு மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டுவந்து கொடுப்பதைப் போல, நாங்கள் பெரியாரவர்களிடம் இக்கனியை (சட்டத்தை)ச் சமர்ப்பிக்கிறோம்.

எனக்கு முன் இருந்தவர்கள்கூட இதைச்செய்திருக்க முடியும்! எனினும் நான் போய் நடத்த வேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சியடைகிறேன்' என்று முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை பேசினார்.

மகிழ்ச்சிப் பேருவகையில் திளைத்த பெரியாரவர்கள், தமது முடிவுரையில், “முதலமைச்சரின் இந்த அறிவிப்பை , நான் அருள்வாக்காகவே கருதி வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.

குன்றக்குடி அடிகளாரும், முன்னதாக மணமக்களை வாழ்த்தினார். தந்தையும் தனயனும் மீண்டும் சந்தித்து, ஒரே