பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

455


கிளம்பிவிட்டனர். அவர்கள் நிலை உயர நிரந்தரமான பரிகாரம் கண்டு பிடிக்க வேணும். ரிபேட் தருவது அரசாங்கப் பணத்தை வீணடிப்பதே ஆகும். அதனால் சில ரகங்களைக் கைத்தறிக் கென்றே கட்டாயமாய் ஒதுக்கித் தீரவேண்டும். அதற்கான சட்டங்களைச் செய்ய வேண்டும்” என்றார். 19-ந் தேதி நாகரசம்பட்டியில் பெரியார் ராமசாமி கல்வி நிலையம் வீரமணி தலைமையில், அறிஞர் சி.என். அண்ணாதுரை திறந்து வைப்பார். பெரியார் அறிவுரை கூறுவார். க. ராஜாராம் எம்.பி. கலந்து கொள்வார் என “விடுதலை”யில் செய்தி வந்தது.

இந்த விழாவில் பெரியார், அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தினார். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்ற குறளைச் சொல்லி, “நான் இவர்கள் தோற்க வேண்டும் என்று மனப் பூர்வமாகப் பாடுபட்டேன். இருந்தும் எல்லாவற்றையும் மறந்து, தீமை செய்த என்னைத் தண்டிப்பது போல், இதற்காகத் திருச்சிக்குப் புறப்பட்டு வந்து என்னைப் பார்த்தார்கள். இவர்களது பெருந்தன்மையால் எனக்குத்தான் வெட்கமாகப் போய்விட்டது. தலை நிமிர்ந்து பேச முடியவில்லை. சங்கடப்பட்டேன்.“ என்றார். அண்ணா பேசும் போது, பெரியாரின் கருத்துகளுக்கெல்லாம் சட்ட வடிவம் தருவோம். அதற்காகத்தான் பதவியில் இருப்போம். பெரியார் அவர்கள் பதவியை விட்டு எப்போது வரச் சொன்னாலும், அவரோடு சேர்ந்து எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவோம். பதவியை விட்டு வரவா? இருக்கவா?” என்று கேட்டு, உணர்ச்சி மயமாக்கினார். இடையிலே ஒரு நகைச்சுவை:- “என். டி. சுந்தரவடிவேலுவைத் தமிழக அரசின் கல்வித்துறை ஆலோசகராகப் போட்டு, இப்போது தான் ஃபைலில் கையெழுத்திட்டு வருகிறேன்' என்று அண்ணா பெரியார் காதில் கூறினார். பெரியார் உடனே பரபரப்புடன் எழுந்து, மைக் முன்பு வந்து, “ஒரு நல்ல செய்தி...” என்று தொடங்கு முன்பு அண்ணா அவரை இழுத்து அமர்த்தி, “இப்போது சொல்லி விடாதீர்கள். காரியம் கெட்டுப் போகும். இது ரகசியம்” என்றார்.

டெல்லி நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதா நிறைவேற்றப்பட்டது. வடநாட்டாருக்கு இருக்கிற மெஜாரிட்டி பலத்தால் “மொழி பற்றிய பார்லிமெண்ட் தீர்ப்பு” என்ற தலையங்கத்தில் 17-ந் தேதி பெரியார், “205 பேர் ஆதரித்தும் 41 பேர் எதிர்த்தும் ஆட்சி மொழி மசோதா நிறைவேறியிருக்கிறது. இது விஷயத்தில் தென்னக எம்.பி.க்களின் தனித்த கூட்டத்தில் மெஜாரிட்டி பார்த்து, முடிவெடுக்கும் முறை கையாளப்படவேண்டும். இந்தி பேசும் பகுதியினர் மெஜாரிட்டியாக இருந்து கொண்டு இருக்கும் வரையில், நாம் நினைப்பது எதுவும் நடக்காது! அதனால் இந்திய யூனியனில் இருப்பது நமக்குக் கேடு தரும் விஷயமே” - என்று குறிப்பிட்டார்.