பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அவர் ஒரு பார்ப்பானைக் கூட மந்திரியாகப் போடவில்லை என்பதோடு, தி.மு.க.வுக்கு எதிரான கொள்கையுடையவர். தமிழானானலும், அவர்களிலும் யாரையும் போடவில்லையே! இதற்காக அண்ணா அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாமே! மேலும், அவருடைய இந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் எந்தத் தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினுடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயமாக இருக்கிறது. அண்ணா வாழ்க என்று இந்த அறுபதாவது பிறந்த நாளில் நாமும் வாழ்த்துவதோடு, தமிழர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளவரை அண்ணா வாழ்வார் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை !" முத்தான பவளச் சொற்களல்லவா?

தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும், இதனால் கெடுதலில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டதாகவும், நீண்ட நாளாகப் பெரியாரின் இயக்கம் செய்த பிரச்சாரமும் உதவியாக இருக்கிறது என்றும், சுகாதார அமைச்சர் சாதிக்பாஷா கூறினார். அமெரிக்காவில் மருத்துவமனையிலிருந்த அண்ணாவின் அன்றாட நிலவரம் குறித்து, மகிழ்ச்சி தரும் செய்திகள், தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 21ந் தேதியும், துணைப்பிரதமர் மொரார்ஜி தேசாய் 28-ந் தேதியும் நியூயார்க்கில் அண்ணாவைக் கண்டு நலம் விசாரித்தனர். இந்தியாவின் ஐ. நா. சபைப் பிரதிநிதி ஜி.பார்த்தசாரதி, நல்ல துணையாக இருந்து வந்தார். ரூ.1.50 விலையில் வெளியிடப்பட்ட பெரியார் 90வது பிறந்தநாள் மலரில், பெரியாரே பத்து கட்டுரைகள் வரைந்திருந்தார். அதில் “எனது நிலை" என்னுந் தலைப்பில் எழுதும்போது, ஒருவித சலிப்பு உணர்வுடன், நான் துறவியாய்ப் போய்விடலாமா என்ற எண்ணம் உண்டாகிறது, என்பதாகக் குறிப்பிட்டிருந்தார் பெரியார்.

கரூரில் பெரியாருக்கு “நகரும் குடில்“ வழங்கும் விழா அக்டோபர் 6-ம் நாள் நடைபெறும் என்றும், குன்றக்குடி அடிகளார் தலைமையில் கலைஞர் காரை வழங்குவார்; மதியழகன் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி அளிப்பார்; பெரியார் அறிவுரை நல்குவார்; அன்பில் தர்மலிங்கம், ஆசைத்தம்பி, திருவாரூர் தங்கராசு, வீரமணி ஆகியோர் பங்கேற்பர் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. மத்திய சுகாதாரக் குடும்பநலத்துறை ராஜாங்க அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் “தலைசிறந்த மனிதாபிமானி பெரியார் ஈ.வெ. ராமசாமி, சீர்திருத்த எழுத்தாளர், தேர்ந்த பகுத்தறிவுவாதி, அயராது பாடுபடும் உயர்ந்த பேச்சாளர்” என்று பெரியாரைப் புகழ்ந்துரைத்தார். சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திய கஜேந்திர