பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


என்பதெல்லாம் கைதேர்ந்த மோசடி வேலையாகும். இன்று நடக்கின்ற பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார். அல்லது ஆரியர்-திராவிடர் போராட்டம், அன்றைக்கே பழங்காலத்திலேயே இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதுதானே தசாவதாரம் என்கிற பத்து அவதாரக் கதைகள்! ஒவ்வொரு அவதாரத்திலும், புகழ் பெற்ற திராவிடர்களை ஒழிக்கத்தானே கடவுளே பிறத்திருக்கிறான்? இதையெல்லாம் நல்ல வண்ணம் சிந்தித்து, தமது இளைஞர்கள் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும்", என்று கருத்து விளக்கங்களைப் பெருத்த அளவில் தொகுத்துத் தந்தார் பெரியார்.

காரைக்குடியில், "அண்ணாவைத் தெரிந்தோ தெரியாமலோ தென்னாட்டு காந்தி என்கிறார்கள். அருள் கூர்ந்து அண்ணாவைக் காந்தியோடு ஒப்பிடாதீர்கள்! அண்ணா முற்போக்குவாதி, மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி. நாட்டில் எழுந்த பல கலவரங்களுக்குக் காரணமே காந்தியார் தான்! அதனால் அவர் பெயரோடு அண்ணாவின் பெயரை இணைக்க வேண்டாம். நமது சமுதாயத்தில் பல விஷயங்கள் சீர்கேடடைந்து, புரையோடிய புண்ணாக இருந்து வருகின்றன. உடல் உறுப்பில், கெட்டுப் போன பாகத்தை வெட்டியெறிந்து விட்டுப், புதிய பாகத்தைப் பொருத்துகின்ற பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற முறைதான் நமது சமுதாயத்துக்கு இப்போது தேவை" என்று பெரியார் பேசினார். காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறவர்களில் எத்தனை பேர் காந்தி சொன்னவைகளைப் பின்பற்றுகிறவர்கள்? கோயில் குச்சுக்காரி விடுதி, காங்கிரசில் அயோக்கியர் புகுந்துவிட்டதால் கலைத்துவிட வேண்டும், காங்கிரஸ் அரசு மதச்சார்பற்றது என்று சொன்னாரே, கேட்டார்களா? என்று கேட்டார் பெரியார்.

அடுத்து 6.10.68 அன்று, கரூரில் பெரியாருக்கு “நகரும் குடில்" வழங்கும் விழா பெருத்த கோலாகலத்துடன், ஊரே திருவிழாக் காட்சியாகச், சிறப்புடன் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலைஞர் கலந்து கொள்ள முடியவில்லை. பெரியாருடன் மதியழகன் ரதத்தில் அமர்ந்து வந்தார். தலைமை தாங்க இருந்த குன்றக்குடி அடிகளார்- வர இயலாது போனதால், கருத்துச் செறிந்த அவர் உரையை, வீர. கே. சின்னப்பன் படித்தார். மழை வந்ததைக் குறிப்பிட்டுக், “ காரோடு பெரியாருக்குக் கார் தருவோம்" என்றார் கலைஞர். காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரசை ஒழிப்பேன் என்று சூளுரைத்தவர்-ஆதரித்தே அதை அழித்தாரே! எனவும் வியந்து போற்றினார். மதியழகன் பெரியாருக்குப் பொன்னாடை போர்த்தி, 1,001 ரூபாய் பொற்கிழியும் வழங்கினார். "நகரும் குடில்" அன்றிரவு கரூரில் புறப்பட்டு, உடனடியாகத் தொலை தூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டது பெரியார், மணியம்மையார், வீரமணி ஆகியோருடன் அதில் வடநாடு பயணம் சென்றார்.