பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

581


பேச்சுக்குப் பிறகு தங்களைப்பற்றியும், தன்மான இயக்க வளர்ச்சி பற்றியும் நிறைய வினாக்கள் எழுப்பினார்கள். பதில்களை விளக்கமாக அளித்தேன்.

கண்ணில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பயணத்தை முடித்துக்கொண்டு, தங்களையும், தமிழகத்து அன்பு முகங்களையும் காண, டிசம்பர் முதல்வாரத்தில் வந்து சேருகிறேன். அமெரிக்காவில் விஞ்ஞானக்கூடங்கள் பலவற்றையும் கண்டேன். அவைகளின் சிறப்புகளை நேரில்தான் விளக்கவேண்டும். தங்கள் அன்பு மறவாத மு. கருணாநிதி, வணக்கம்."

வங்கதேச அரசை இந்தியா அங்கீகரித்ததாக 6-12-71 அன்றைய முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக "விடுதலை" ஏடு தந்தது; 1965-ல் இந்தியாமீது பாக்கிஸ்தான் படையெடுத்தபோது ஆச்சாரியார் என்ன எழுதினாரோ, அதையே இப்போதும் செய்வது பச்சை துரோகப்போக்கு - என்று 10-ந் தேதி வங்கதேசம் பாகிஸ்தான் பிடியிலிருந்து விலகிப் பரிபூரண விடுதலை பெற்றது. சுதந்திர வங்கதேசத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தும்: முஜிபூர் ரஹ்மானை விடுவிக்கக் கோரியும் தமிழ்நாடு சட்ட மன்றம் 17-12-71 அன்று தீர்மானங்கள் இயற்றியது.

பெரம்பலூர் வட்டம், குன்னம், குடும்பநல விழாவில் பெரியார், "பெண்களின் திருமண வயதை உயர்த்திச் சட்டம் கொண்டு வரவேண்டும். குறைவாகப் பிள்ளைபெற இது அனுகூலமாயிருக்கும்" எனக் கருத்தறிவித்தார். 28-ந் தேதி ஆனைமலையில், ஏ.என். நரசிம்மன் நினைவுப் பகுத்தறிவாளர் மன்றம். நரசிம்மன் நகர் காலனி ஆகியவை திறக்கப்பட்டன. மன்றம் துவக்கியவர் ஆனைமலை நகரத்து மாப்பிள்ளையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவருமான கே. ஏ. மதியழகன் பெரியாரும், ஈ.வெ.கி. சம்பத், அமைச்சர்கள் செ. மாதவன், க. ராஜாராம் ஆகியோரும் விழாக்களில் பங்கு பெற்றனர்.

29-12-71 திருச்செங்கோட்டில், “உயிர்ச்சேதம் எதுவுமே இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவர் உலகிலேயே அண்ணா ஒருவர்தான். ரஷ்யாவில் நிறுவினார்கள் என்றாலும் அங்கே பலாத்காரப் புரட்சிதான் தேவைப்பட்டது” என்று பெரியார், புத்தம் புதிய நற்கருத்தொன்றை நவின்றார்!

பெரியாரின் புத்தாண்டுச் செய்தியினைப் பெறுகின்ற பெரு வாய்ப்பைப் பெற்றுப் பிறந்தது 1972. “கடந்த ஆண்டில் தமிழ் நாட்டுக்கும், தமிழர் சமுதாயத்துக்கும், மிகவும் பாராட்டத்தக்க நன்மையும், வளர்ச்சியும், தி.மு.க. ஆட்சியின் காரணமாய் அடைந்திருக்கிறோம்! வரப்போகிற ஆண்டிலும், அதற்கு குறைவில்லாமல், மிகுதியாகவே நன்மையும், வளர்ச்சியும் அடைவோம் என்பதில்