பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

614

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


முதல்வர் கலைஞர், “இதெல்லாம் அர்த்தமற்றது. ஆகஸ்டு மாதம் மதுரை மாநாட்டில் அவரே கூறினார் - அடுத்த தேர்தலுக்கு முன்பு ஆட்சியைக் கவிழ்க்க மத்திய அரசே முயன்றாலும், முறையல்ல என்று. இப்போது மாத்திரம் என்ன அவசியம் வந்தது?” என்று கேட்டார். 12-ந் தேதி அமைச்சர் என். வி. நடராசன் மணிவிழா, சென்னை ஆபஸ்ட்பரியை அடுத்துத் தி.மு. கழகத்தால் வாங்கப்பட்ட அண்ணா அறிவாலயத்தில், பெரியார் தலைமையில், சிறப்பாக நடைபெற்றது. கலைஞர் கேடயம் வழங்க, நாவலர் பொன்னாடை போர்த்த, சத்திய வாணிமுத்து வாழ்த்திதழ் படிக்க, ம.பொ.சி. மலர் வெளியிட, விழா கோலாகலமாய் நிறைவேறியது.

13-11-72 அன்று கூடிய சட்டமன்றத்தில், சபா நாயகர் மதியழகன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், மறுநாள் எடுத்துக் கொள்ளப்படுமென அவைத் தலைவரான அவரே முதலில் கூறினார். பின்னர் திடீரென்று, “சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தலாம். சபை டிசம்பர் 5-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது” என்று முரண்பாடாகக் கூறிவிட்டு, எழுந்து சென்று விட்டார் 14-ந் தேதி சபாநாயகர் இல்லமாகிய “கூவம் இல்லம்" முன்பாக, மதியழகனைத் தேர்ந்தெடுத்த சட்டசபைத் தொகுதியான ஆயிரம் விளக்குப் பகுதியினர், ஆர்ப்பாட்டம் செய்து கைதாயினர். 15-ந் தேதி அர்த்தால் நடத்த எம்.ஜி.ஆரும், வலது கம்யூனிஸ்ட்க ளும் வேண்டுகோள் விடுத்தும், சரியாக நடைபெறாமல் பிசுபிசுத்தது. 15-ந் தேதியன்று தமிழக ஆளுநர் சட்டசபையை இறுதியாக்கி (Prorogue) செய்து ஆணை பிறப்பித்தார்.

பெரியார், 14-ந் தேதி சிந்தாதிரிப்பேட்டை பொதுக்கூட்டத்தில், “தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க விரும்பியவர்களுக்குக் கருவியாக எம்.ஜி.ஆர். இப்போது கிடைத்துவிட்டார். ஆமாம்; புகார் வந்ததன் பேரில் மந்திரி பதவியிலிருந்து மதியழகனை 1970 செப்டம்பரில் விலக்கிய கலைஞர், இப்போது எதற்காக அவருக்குப் போய்ச் சபாதாயகர் பதவியைத் தந்தார்?” என்று கேட்டார் பெரியார். அடுத்த நாள் தலையங்கம் “சபாநாயகர் நிலை”. அதில் “நாணயக் கேடாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் மீது பதவியிலிருந்து விலக்கப் பட்ட மதியழகன், அன்றைக்கே தனது மரியாதையை இழந்து விட்டார். அண்ணா செய்த தவறுதான் முதலில் இவருக்கு 1967-ல் மந்திரி பதவி தந்ததாகும். அடுத்து ஒரு தவறு அண்ணா செய்தது என்ன வென்றால், எம்.ஜி.ஆரைக் கட்சியில் சேர்த்ததாகும். அவர் தம்மவரும் அல்ல; நம் இனத்தவரும் அல்ல" என்று எழுதினார் பெரியார். அதை மெய்ப்பிக்கத் தானோ என்னவோ, திண்டுக்கல்லில் இருந்த பெரியார்