பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

696

பகுத்தறிவு பகலவன் தந்தை


எண்ணிலா அருளாட்சித் திறன்களை எண்ணுதல் இன்பந் தருவதாகும்; அன்போடியைந்த நன்றிக் கடனாற்றுதலுமாகும்!

யாருக்காவது பெரியார் பொருளுதவி செய்தால்-(பலருக்குச் செய்துள்ளார் வெளியில் தெரியாமல், தனது டைரியில் குறித்துக் கொண்டு அதைச் சொல்லிக் காட்டி வெளிப்படுத்தவே மாட்டார். ஆனால், பண விஷயத்தில் யாராவது நாணயக் குறைவாக நடந்தால், அவர்களை மன்னிக்கவே மாட்டார். தவறு செய்தவர் நேர்மையாகத்தாமே ஒத்துக் கொண்டால், அத்தோடு மறந்து விடுவார் நாணயங்காக்கும் பெரியார்!

தாம் செய்து வருவது நன்றி கிட்டாத பணி- Thankless job என்பது நன்கு தெரிந்திருந்தும், சமுதாய நலனுக்காக அதையே தொடர்ந்து செய்து வந்தார். அதனால், நிச்சயம் தம்மிடம் நன்றியோடு நடந்து கொள்ளக் கடமைப்பட்டோர் கூட, மறந்து விட்டால், அதைப் பொருட்படுத்தும் பழக்கமே இல்லாது போயிற்று, பெரியாரிடம் அதே தேரத்தில் தமக்கு யாரும் உதவி செய்தால் அல்லது செய்வதாகச் சொல்லிவிட்டால் கூடப்போதும் அவருக்குத் தாம் மிகவும் கடன்பட்டதாக எண்ணிக் கொள்வார். உதாரணமாகக் காரில் செல்லும் போது, பாதை தெரியாமல் வழிப்போக்கரிடம் கேட்டு, அவர் சொன்னால், அவருக்குத் தாமே நன்றி - (Thanks) சொல்லிய பின்புதான் டிரைவர் காரை எடுக்க அனுமதிப்பார் பெரியார்.

பொதுப் பணியில் ஈடுபடுவோர் தமது சொந்த (Self) மான அவமானங்களை ஒரு பொருட்டாய்க் கருதக் கூடாது என்பது தன்மானத் தந்தை பெரியாரின் கொள்கை. திருக்குறளில் வேறு எதை விரும்பாவிட்டாலும்வட, “குடிசெய் வார்க்கில்லை பருவம் மடி செய்து மானம் கருதக்கெடும்” என்ற குறளை அவர் மிகவும் விரும்புவார்.

அவர், பதவிகளைத் துச்சமாக மதித்தார். ஆனால் பதவிகளில் இருப்போரைப் பெரிதும் மதித்தார். இதற்கு எடுத்துக் காட்டுகள் பெரியாரின் வாழ்க்கையில் ஏராளமாக உண்டு. அவரைச் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருக்கச் சொல்லி 1939 -ஆம் ஆண்டிலேயே சவர்னர் வேண்டினார். இராஜாஜியும் கேட்டுக் கொண்டார். பதவிக் கூண்டில் சிக்கிக்கொள்ள அந்தச் சுதந்திரச் சிங்கம் விரும்பியதேயில்லை பெரியார் பொதுவாழ்க்கையில் இறங்கிய நாளிலிருந்து, தமிழகத்தில் முதலமைச்சர்களாக வீற்றிருந்தவர் அத்தனை பேருமே அவருடைய நண்பர்களாகவோ, தோழர்களாகவோ, தொண்டர்களாகவோதான் இருந்திருக்கிறார்கள். தம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருப்பினும், தம்மைக் காணிவருவோர் யாவரேயாயினம். பெரியார் எழுந்து நின்று, இருகை கூப்பி வணங்கி, “வாங்க வாங்க” என்று பரிவோடும் மரியாதையோடும் அழைத்து, அமரச் செய்வார். வெளிவாயில் வரை சென்று, அவர்களை வழியனுப்பி வைப்பார்.