பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

103


கதராடை அணிந்தார். தான் மட்டுமல்ல. தன் குடும்பத்தினர் அனைவரையுமே கதர் ஆடை அணியும்படிச் செய்தார்.

கதர் துணிகளை மூட்டை மூட்டையாகத் தம் தோளில் சுமந்தார், விற்றார். காந்திஜியின் கொள்கைகளைப் பரப்ப ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார்.

அவரது திறமையான பேச்சு மக்களைக் கவர்ந்திழுத்தது. ஈ.வே.ரா. என்னும் மூன்றெழுத்து தமிழகமெங்கும் பிரபலமாயிற்று.

ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈ.வே.ரா. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற பாடுபட்டார்.

நீதிமன்றங்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரசு இயக்கம் தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி நடந்தார் ஈ.வே.ரா.

அதனால் அவர் குடும்பத்திற்கு நீதிமன்றத்திலிருந்து வர வேண்டிய ஐம்பதினாயிரம் ரூபாயை வேண்டாம் என்று இழந்து ஒதுக்கினார். இது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரிந்தது. அடுத்தபடியாக கோர்ட்டிலிருந்து அடமான பத்திரம் மூலம் தனக்கு வரவேண்டிய, 28,000/ ரூபாயையும், ஈ.வே.ரா. பகிஷ்கரித்தார்.

அப்படிச் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். ஈ.வே.ரா. கேட்கவில்லை. வேண்டுமானால் அந்தப் பணத்தை திலகர் நிதியில் சேர்த்துவிடலாம் என்றனர்.