பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

109


பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவும்; அரிசனங்கள் கொடுமைப் படுத்தப் படுவதை தடுத்து நிறுத்தவும்; கடவுள் அனைவருக்கும் என்பதை அரிசன ஆலயப் பிரவேசத்தின் மூலம் நிரூபிக்கவும் காந்திஜி சத்தியாக்கிரகப் போராட்டங்களை ஊக்கு வித்தார்.

வைக்கத்தில் அரிசனங்களை உயர் சாதியினர் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தனர். அதைக் கண்டித்து கேரளாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் வைக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார்கள்.

திருவிதாங்கூர் மன்னர் அப்போராட்டத்தை அடக்க எண்ணினார். சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்தது அரசாங்கம்.

வைக்கத்தில் தொடர்ந்து போராட்டத்தை நடத்தத் தலைவர்கள் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஈ.வெ.ரா. அப்போதுதான் ஈரோடு வந்திருந்தார். அவருக்கு உடம்பு சரியில்லை. வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வைக்கம் சத்தியாகிரக நிலைமை பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டது.

செய்தி கேள்விப்பட்டவுடன், தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல், ஈ.வெ.ரா. வைக்கம் புறப்பட்டுப் போனார்.

ஈ.வெ.ரா. வந்துவிட்ட செய்தி அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள், முன்னிலும் உற்சாகமாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.