பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

29



மனைவியின் ஆதரவும், உற்சாகம் ஊட்டும் வார்த்தைகளும் வெங்கடப்ப நாயக்கருக்கு உடம்பில் புதிய ரத்தம் பாய்ச்சியது போல் மிகுந்த தெம்பை அளித்தது.

கருமமே கண்ணாக இருவரும் கடுமையாக உழைத்தனர். சின்னத்தாயம்மையார் கூறியது போல் வருவாய்க்கு ஏற்றபடிச் சிக்கனமாகச் செலவு செய்து; வீண் ஆடம்பரங்கள் ஏதுமின்றி குடும்பத்தை நடத்தினார்.

சிறுகச் சிறுக மாதா மாதம் பணம் சேமித்து மிகக் குறுகிய காலத்திற்குள் தன் கணவர் கையில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்தார்.

வெங்கடப்ப நாயக்கர் நெகிழ்ந்து போனார். இவ்வளவு பொறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த மனைவி கிடைத்தது கடவுள் அருளே என்று மனம் மகிழ்ந்தார்.

மனைவி கொடுத்த பணத்தைக் கொண்டு வெங்கடப்ப நாயக்கர் ஒரு மாட்டு வண்டி வாங்கினார்.

அவ்வண்டியில் வாடகைக்குச் சரக்குகளை ஏற்றி அருகிலுள்ள ஊர்களுக்கு சந்தைக்கும் கொண்டு போய் பொருள் சேர்த்தார்.

ஓரளவு பணம் சேர்ந்ததும் மாட்டுவண்டி ஓட்டிப் பிழைப்பதை நிறுத்தினார். வண்டி விற்ற பணத்துடன் தன்னிடமுள்ள பணத்தையும் போட்டு மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்தார்.

வேலைக்கு ஆட்களை அமர்த்திக் கொள்ளாமல் கணவரும் மனைவியுமாக இருவருமே மளிகைக் கடையில் முழு நேரமும் உழைத்தனர்.