பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தந்தை பெரியார்


ஆனாலும் கிருஷ்ணசாமி இவற்றையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. முன்பு ஒரு தடவை தம்பியைப் பற்றி அப்பாவிடம் சொல்லி, அதனால் தம்பி அப்பாவின் பயங்கர கோபத்திற்கு ஆளானதிலிருந்து, கிருஷ்ணசாமி தம்பியைப் பற்றி வீட்டில் எவ்வித புகாரும் கூறுவதில்லை.

பள்ளிக் கூடத்திற்கு தினம் தாமதமாக வருவதையோ, கீழ்சாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதையோ அவர்கள் வீட்டிலெல்லாம் எது கொடுத்தாலும் அருவெறுப்புக் கொள்ளாமல் வாங்கிச் சாப்பிடுவதையோ எல்லாவற்றிற்கும் மேல் சமீப காலமாக சலீம் என்கிற முகம்மதியப் பையனோடு அதிகம் பழகுவதையும்; அவர்கள் வீட்டிலும், தின்பண்டங்கள் வாங்கித் தின்பதையோ கூட கிருஷ்ணசாமி வீட்டில் வாயே திறக்கவில்லை.

'இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது' என்று தம்பிக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இராமசாமி கேளாமல் போகவே, கிருஷ்ணசாமி வெறுத்துப் போய்; தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இராமசாமியிடமிருந்து ஒதுங்கியே விட்டார்.

இராமசாமிக்கு, சலீமின் பழக்கம் ஏற்பட்ட பிறகு தான் அசைவ உணவுகளை வீட்டிற்குத் தெரியாமல் உண்ணத் துவங்கினார். சலீமின் தாயார் ஆசையோடு கொடுக்கும் பிரியாணியை ராமசாமி மிகவும் ரசித்து உண்டார். அதனால் அந்த முஸ்லிம் அம்மணி இராமசாமி வரும் போதெல்லாம், தவறாமல் பிரியாணி செய்து கொடுப்பார்; அவரும் சாப்பிடுவார்.