பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

- 'பள்ளிக்கூடம் ஒழுங்காய்ப் போவதுமில்லை, படிப்பதுமில்லை; கெட்ட சகவாசமும், தீய பழக்க வழக்கங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. எல்லாவற்றிற்கும் சிகரமாகக் கீழ்சாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுகிறான். தங்கள் பெருமை மிக்க குல ஆசாரத்தையும்; அனுஷ்டானங்களையுமே தன் மகன் பரிகசிப்பது போல் நடந்து கொள்கிறான்.'

சின்னத்தாயம்மையாரால், கணவரிடம் முறையிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

வெங்கடப்ப நாயக்கரும், மகனைத் திருத்த, தனக்குத் தெரிந்த வழியெல்லாம் முயன்று தோற்றுப் போனார். அவனைத் திருத்த ஒரே வழிதான் அவருக்குத் தெரிந்தது.

மறுநாள் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இராமசாமியை அருகில் அழைத்தார்.

அவன் தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையைக் கேட்டு வாங்கினார்.

"இனிமேல் நீ படிக்க வேண்டாம்; என்கூட மண்டிக் கடைக்கு வந்து வியாபாரத்தை கற்றுக் கொள்" என்றார்.

இராமசாமி எவ்வித மறுப்பும் கூறாமல் “சரி அப்பா", என்று கூறினான்.

தன்னுடைய தந்தை, எவ்வித முன் அறிவிப்புமின்றித் திடீரென்று தன் படிப்பை நிறுத்தி விட்டாரே! என்கிற கவலையோ, துளி வருத்தமோ கூட இராமசாமிக்கு ஏற்படவில்லை.