பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

69




'பகுத்தறிவில்லாத ஆசிரியர்களிடம் பாடம் படிப்பதைவிட; படிக்காத முட்டாளாக இருப்பதே மேல்' என்று அவருக்குத் தோன்றியது.

ஊர்ப்பிள்ளைகளுக்கெல்லாம், கல்விக்கண் திறக்கப் பள்ளிக்கூடம் கட்டியவர்; தன் பனிரெண்டு வயதுப் பிள்ளைக்குப் பள்ளியின் வாசலை அடைத்து விட்டார். ஆசிரியர்கள், பெரிய தலைவலி விட்டதென்று மகிழ்ந்தனர். 1891-ம் ஆண்டோடு அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது.

இராமசாமி இதற்கெல்லாம், சிறிதும் கவலைப் படாதவராகவே காணப்பட்டார். சாதிப்பித்து பிடித்த ஆசிரியரிடம் கல்வி கற்பதை விட முட்டாளாக இருப்பதே மேல் என எண்ணி, அப்பாவுடன் சேர்ந்து கடைக்குப் போனார். வெகு விரைவிலேயே வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கமிஷன் கடையில் திறமையாக ஏலம் போட்டு விற்பது -

மொத்த வியாபாரிகளிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் பக்குவமாகப் பேரம் பேசவேண்டிய முறை -

இரயில் நிலையங்களிலிருந்து கடைக்கு வந்து போகும் சரக்குகளுக்கு ஒழுங்காகக் கணக்கு வைத்துக் கொள்வது;

இப்படித் தன்தந்தையின் தொழில் துறையில் - சகல விதத்திலும் தன் அறிவுத்திறனை பிறர் மெச்சும்படியாக இராமசாமி நடந்து கொண்டு; விரைவிலேயே நற்பெயர் எடுத்து விட்டார்.