பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

75


12. வழிகாட்டியாக வாழ்ந்து - காட்டியவர்...

"சுய மரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது. கணவன் மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள், கூட்டாளிகள் என்பதுதான்; இதில் ஒருவருக்கொருவர் அடிமை - ஆண்டான் என்பது கிடையாது. இருவரும் சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்."

- தந்தை பெரியார்

ஒரு மரத்துண்டை எத்தனை நேரம் நீருக்கடியில் அமிழ்த்தி வைத்திருந்தாலும், கையை எடுத்தவுடன் அந்த மரத்தடி எழும்பி, நீர் மட்டத்திற்கு மேலே வந்து மிதக்கவே செய்யும்.

அப்படித்தான் இராமசாமியின் வாழ்க்கையும் இருந்தது. பெற்றோரை அனுசரித்துப் போனதில்; மற்றவர்கள் கண்ணுக்கு அவர் மாறி விட்டதாக, திருந்தி விட்டதாகத் தோன்றினாலும்; இராமசாமி தன் இயற்கைக் குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

தன்னைப் பொறுத்தவரை, மாறுவதற்கோ, திருந்துவதற்கோ தான் எந்தத் தவறும் செய்ததாக இராமசாமி எண்ணவில்லை.

நாகம்மையைத் திருமணம் செய்து கொண்ட பிறகும், இராமசாமி தன்னுடைய பழக்க வழக்கங்களையும்; தான் விரும்பிய நண்பர்களின் சேர்க்கையும் விட்டு விலகி விடவில்லை; தனக்குச் சரி என்று பட்டதைத் தயங்காமல் செய்தார்.