பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகனைக் காணோமென்றதும் சின்னத்தாயம்மையார் துடித்துப் போனார். வெங்கடப்பர் ஊர் முழுது தேடினார். நாலா பக்கங்களுக்கும் ஆட்களை அனுப்பி தேடினார். பயன்தான் இல்லை. மனமுடைந்து போனார்.


14. காசியில் கற்றுக் கொண்ட பாடம்

"பாமரனின் ஞான சூனியம், சுயநலக் காரனின் எதிர்ப்பு என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும்."

- தந்தை பெரியார்

'துறவுக்குத் துணை எதிரி' என்பதை இராமசாமி கற்றுக் கொண்டார்.

அவருடன் கூட வந்த தங்கை புருஷனும் மற்ற நண்பரும் சென்னையை அடைந்ததும் நாம் எதற்காகக் காசிக்குப் போகிறோம்? என்று கேட்டனர்.

"காசிக்குச் சென்று கொஞ்ச காலம் சாமியாராக வாழ்ந்து பிறகு துறவி ஆகிவிடலாம்” என்று கூறினார்.

இதைக் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டும் போனார்கள்.

"எங்களுக்குத் துறவியாக விருப்பம் இல்லை; உடனே ஊருக்குப் போக வேண்டும்" - என்றனர்.

இராமசாமி மறுப்பு ஏதும் கூறாமல் உடனே அவர்களை ஈரோட்டுக்கு அனுப்பி வைத்தார். மறு ரயிலிலேயே,தனியாக அவர் காசிக்குப்புறப்பட்டு விட்டார்.