பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தந்தை பெரியார்


இராமசாமி இசையவில்லை.

"சரி அப்படியானால் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளையாவது என்னிடம் பத்திரமாக வைத்துவிட்டுச் செல்லுங்கள், காசியிலிருந்து திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.

இராமசாமிக்கு இந்த ஏற்பாடு பிடித்தது. இராமசாமி, தான் அணிந்திருந்த தங்கக் காப்பு, வைரக் கடுக்கன், வைரமோதிரம், தங்கச் சங்கிலி, தங்க அரைஞாண் இவை அனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து நாயுடுவிடம் ஒப்புவித்தார்.

இவற்றில், ஒரே ஒரு தங்க மோதிரத்தை மட்டும், போட்டுக் கொண்டு, மற்றவர்களுடன் காசிக்குப் புறப்பட்டார்.

போகிற வழியில் கல்கத்தாவில் சில நாள் தங்கினார்கள்.

காசியை அடைந்தவுடன், அந்த இரு பிராமணர்களும், புரோகிதர்களுடன் சேர்ந்து கொண்டு, இராமசாமியை விட்டு விட்டனர்.

காசியில் அன்ன சத்திரங்கள் ஏராளமாக இருந்தன. ஆயினும் இராமசாமி பிராமணராக இல்லாததால், அவருக்கு ஒரு சத்திரத்திலும் உணவும் கிடைக்க வில்லை; தங்க இடமும் கிடைக்கவில்லை.

செல்வத்திலே புரண்டு வளர்ந்தவர். வெள்ளித்தட்டில், வேளைக்கு விதம் விதமான உயர் ரக உணவு வகைகளை உண்டு வாழ்ந்தவர்; தாங்க முடியாத பசியோடு சத்திரத்து வாசலில் உட்கார்ந்திருந்தார்.