பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii

அவர் தொகுத்துள்ள பெரியார் சிந்தனைகள் மூன்று பகுதியும், மாபெரும் சாதனையாகும். அவரை எண்ணிய போது மலைப்பு ஒரளவு நீங்கியது.

தன்னையீன்ற சின்னத்தாயம்மையார் மறைந்தபோது பெரியார் எழுதியுள்ள கட்டுரை, மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று இலக்கியம். பன்னீர் செல்வம், நாகம்மையார் மறைவின்போது தீட்டியவை, ஒப்பற்ற கையறு நிலை இலக்கியங்கள். அய்ரோப்பியச் சுற்றுப் பயணத்தின்போது அவர் எழுதி அனுப்பிய மடல்கள், தலை சிறந்த பயனக் கட்டுரைகள். இராமாயண ஆராய்ச்சி ஒன்றே அவருக்கு பி. எச். டி. வாங்கித்தர வல்லது. தாமே நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியவர். இனிவரும் உலகம், தத்துவ விளக்கம் இரண்டும் ஆங்கிலத்தில் இருந்தால் நொபெல் பரிசு அவரைத் தேடிவந்திருக்கும். அவர் தீட்டிய தலையங்கம் அத்தனையும் ஈட்டியின்முனைகள். அவ்வளவு பெரும் எழுத்தாளர், தமது சுயசரித்திரம் எழுதாமல் விட்டதால், எனக்குக்கூட அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடிய தைரியம் பிறந்து விட்டதல்லவா?

உலகத்திலேயே தந்நிகரற்ற சுயசிந்தனையாளர், பகுத்தறிவு ஊற்று, தீர்க்கதரிசி, பெரியார். நல்வாய்ப்பாக இவருக்கு ஆங்கிலம் தெரியாது. தெரிந்தால், இவர் கருத்துகள் இரவல் என்றும் சொல்ல, இங்கு ஆள் இருப்பர்! உலகத்தில் எத்தனையோ சிந்தனைச் செல்வர்கள் வாழ்ந் திருக்கிறார்கள். சொல்லாகவும் எழுத்தாகவும் தங்கள் அறிவுக் கருவூலத்தை அவர்கள் வழங்கியுள்ளார்கள். ஆனால், பெரியாரைப் போலப் பகுத்தறிவின் அடிப்படையில் ஒர் இயக்கத்தையே உருவாக்கிய பெருமை பெற்றவர் உலகில் வேறு எவருமே இலர்! நிகழ்காலமும், எதிர்காலமும் இவரது இணையற்ற அறிவுச் சுரப்பைத் தொழுது வரவேற்கத் துடித்து நிற்கின்றன!

"இத்தகைய ஒரு மாமேதையின் வாழ்க்கைச் சரிதம் வரைவது எளிதா? ஒரு சரித்திராசிரியரோ, நாவலாசிரியரோ தத்தம் நோக்கங்களை, விருப்பங்களைத் தம் நூலில் வலி