பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

தமிழ் நாட்டில் சங்ககாலம் என்றழைக்கப்படும் பொற்காலம் ஒன்று, என்றோ இருந்தது! அது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் எனலாம். பரந்த விரிந்த அப்பண்டைத் தமிழகத்தைச் சேரர், சோழர், பாண்டியர் எனும் மூவேந்தர் சீரோடும் சிறப்போடும் ஆண்டு வந்தனர். தமிழ்மொழி செங்கோலோச்சி மிக உன்னத நிலையில் மேலோங்கி நின்றது. தமிழ் பயின்ற புலமைச் சான்றோர் அரசர்க்கே அறிவுரை பகரும் திண்மையும், வன்மையும் உடையோராயிருந்தனர். தமிழ்நாட்டில் அப்போது சாதி சமயங்கள் இல்லை. மதபேதங்கள் இல்லை. குலம்கோத்திரம் கிடையாது. ஆண்டான் அடிமைப் பிளவுகள் இல்லை. கடவுள்கள் பல இல்லை. காதலும் வீரமும் வாழ்வோடு பிணைந்திட்ட, இயற்கையோடு இணைந்திட்ட இன்ப வாழ்வு நிறைந்திட மக்கள் களிப்போடு உலாவந்தனர்.

உலக அரங்கில் மிகவும் மேலாக மதித்துப் போற்றப்படும் நிலையிலிருந்த தமிழகத்தில் கிறித்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஊறு நேரத் தொடங்கிற்று. தமிழ் நாட்டின் அகமும் முகமும் மாறிட அயலவர் நாகரிகம் அடிவைக்கத் துணிந்தது. களப்பிரர் என்னும் அந்நியர் படையெடுத்து, ஆட்சியினைக் கைப்பற்றித் தமிழ்ப் பண்பாட்டினை அழித்ததால் வடமொழி ஆதிக்கமும் படை யெடுத்தது; சமண பெளத்த மதங்களும் நுழைந்தன. மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. புராணக் கற்பனைகள் மக்கள் வாழ்க்கையில் ஊடுருவிப் புகுந்தன.

கிரேக்கக் கடவுள்களைப் போலவே உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்களைக் கடவுளாக வணங்கும் இழிவான நிலைக்கு இறங்கினர் மக்கள்.

வைதிக மதங்களான சைவம், வைணவம் இரண்டின் செல்வாக்கினால் உந்தப்பட்ட பல்லவ அரசர்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தனர். இவர்கள் ஆளுகையில் சிற்பக்கலை வளர்ந்தது; கோயில்கள் பெருகின; சமண பவுத்த மதங்களை அடியோடு அழித்திட இவர்கள், தமிழ் மூவேந்தர்