பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தந்தை பெரியார் சிந்தனைகள்



என்று சொல்லும்படியாக ஏதாவது அமைப்போ வேறுபாடோ காட்டமுடியுமா அதற்கு? இதற்கு ஆதாரம்தான் ஏதாவது சொல்ல முடியுமா? ஒன்றும் இல்லையே!

(iv) சாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும், இந்து மதத்தை வைத்துக்கொண்டு தீண்டாமை போகவேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர, சிறிதும் அறிவுடைமையாகாது என்பது என் கருத்து” என்கின்றார் அய்யா.

(v) காவலர் பணியைத் தாழ்த்தப்பட்டவர்க்கே தரவேண்டும். அவர்களைப் பார்ப்பனர் சேரியில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த சிற்றூர்களுக்குப் பரிசளிக்கவேண்டும். தாழ்த்தப்பெற்ற மக்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்றவேண்டும். தாழ்த்தப் பெற்றவர்களுக்கென்று தனியாகச் சேரிகள் இருக்கக் கூடாது (இன்று கலைஞரின் சமத்துவபுரக் கருத்து இத்திசையில் சிறந்த பணியாற்றுகிறது).

இன்று தீண்டாமை குறைந்துவிட்டது. இக்கருத்தை வலியுறுத்துவதற்காக எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சிறுகதைகளும் புதினங்களும் தோன்றியுள்ளன. தீண்டாமை குறித்து ஒன்றிரண்டு புதுக்கவிதைகளும் உள்ளன. “வள்ளி சிரித்தாள்” என்ற தலைப்பில் உள்ள ஒரு கவிதை.

சப்பரத்தில் வள்ளியும் முருகனும்
காஷ்லைட் தூக்கியவாறு
நான்முன்னால் சென்று கொண்டிருந்தேன்
அபிஷேகத்திற்காக
பன்னீர் பாட்டலுடன் வந்த பட்டர்
என்மீது மோதிவிட்டார்.
“டேய் மடப்பயலே தீட்டாச்சேடா
நான்குளிச்சிகிட்டில்லேடா சாமி கிட்டே போகனும்”
நான் சப்பரத்தைப் பார்த்தேன்
வள்ளியின் உருவம் சிரித்துக் கொண்டிருந்தது.[1]

நல்ல கிண்டல், தீட்டைப் பொருட்படுத்தாது இறைவனே வேடர் குலப்பெண்ணை மணந்து கொண்டதை நினையாமலே, அந்த இறைவனுக்குப் பூசை செய்யும் பட்டர் தீட்டைப்பற்றிப் பேசுகின்றார். நல்ல நகைச்சுவைக் கவிதை இது.


  1. கோதண்டம், கொ, மா: கோழிக்குட்டிகளும் பன்றிக்குஞ்சுகளும்- பக்.41