பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூல் முகம்


எவன் உயிர்க்கு உயிராய் எள்ளும்எண் ணெயும்போல்
எங்கணும் இடையுறா நின்றான்
எவன் அனைத்து உலகும் என்றுகாத் தளிக்க
இறைமைசால் மூவுருவு எடுத்தான்
எவன்முதல் இடைஈறு இன்றிஎஞ் ஞான்றும்
ஈறிலா மறைமுடி இருப்பான்
அவன்எனைப் புறக்கத் திருக்களா நீழல்
அமர்ந்தருள் புரிந்தனன் உள்ளே[குறிப்பு 1]

-அதிவீரராம பாண்டியன்


தந்தைப் பெரியாருடன் என் இளமைக் காலத்திலிருந்து அவர்தம் சொற்பொழிவைக் கேட்டும், நேரில் உரையாடியும், வாதிட்டும் பழகியவன். அதனால் வள்ளுவரின் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ (அதி. 45) குறிப்பிடும் ‘பெரியாருக்கு’ இவர் இலக்கியமாகின்றார் என்பது என் அசைக்க முடியாத முடிவு. அத்தகைய பெரியாரைப்பற்றி அண்ணா பொது வாழ்வியல் மையத்தில் (சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் டாக்டர் சி.அ.பெருமாள் அறக்கட்டளைப் பொழிவுகளாகப் 2001) பேசும் வாய்ப்பு தந்தமைக்குத் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.கோதண்டராமன் அவர்கட்கும் மையத்தின் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். தேசீய சொத்தாக வழங்கியுள்ள இராமாநுசர், தாயுமானவர், இராமலிங்க அடிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் படைப்புகளை அறிஞர்கள் ஆராய்ந்து வருவதைப் போல் தந்தை பெரியாரின் எழுத்து, பேச்சுகளை அறிஞர்கள் என்றும் ஆய்ந்து வர வேண்டும் என்பது என் அகத்தில் படிந்துள்ள ஆழமான விழைவு. அவரை நாத்திகன் என்று ஒதுக்கிவிடுவது அறியாமை.

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய திரு இராம. வீரப்பன் (எம்.ஜி.ஆர். கழகத் தலைவர்) அவர் அமைச்சராக இருந்த காலம்


  1. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - 16
XII