பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் நான் அறிவேன். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டையாண்ட நல்ல அமைச்சர்கள் சிலருள் இவர் முன்னணியில் நிற்பவர். எம்.ஜி.ஆர். ஐப் போலவே விரிந்த மனம் உள்ளவர். ஏழை, எளியவர்கள்பால் பாசமும் நேசமும் மிக்கவர். அவர்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்ற பெருநோக்கம் கொண்டவர். பெரியார் வழி நின்று சாதி வேறுபாட்டைக் கடிபவர். பெரியார் கொள்கைகளுள் பலவற்றை ஏற்று நடப்பவர். பொது அறிவு (common sense) மிக்கவர். தமிழ்ப்பற்று மிக்கவர். தமிழ் வளர்ச்சிக்காகத் தம் வீட்டையும் ஈந்தவர் (வள்ளல் அழகப்பரைப் போல்). இத்தகைய பேரன்பர் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியது இந்நூலின் பேறு; என் பேறும் கூட. வாழ்த்துரை வழங்கிய வள்ளலுக்கு என் மனங்கனிந்த நன்றி உரியது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தவர் அண்ணா பொதுவாழ்வியல் மையப் பேராசிரியர் துறைத் தலைவர் டாக்டர் இரா.தாண்டவன் அவர்கள். பேராசிரியர் துறைத் தலைவராக இருந்து ஆற்றும் பணிகளைப் போல்- அவற்றை விடவும்- பொதுத் தொண்டு ஆற்றி வருவது அதிகம். அறிஞர் அண்ணாவைப்போல் விரிந்த மனத்துடன் தம்மிடம் வரும் அனைவருக்கும் அவர்கள் எத்துறையைச் சார்ந்தவர்களாயினும் வேண்டிய உதவிகளைச் சிறிதும் தயங்காது செய்து வருபவர். ஒருமுறை ஒரு மூன்றாண்டுக் காலம் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிலும் (Syndicate) இடம் பெற்றுச் செய்த தொண்டினை அனைவரும் அறிவர். இத்தகைய அன்பர்- நல்லவர்- வல்லவர்- இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியது நூலின் பேறு; என் பேறும் கூட. இத்தகைய பண்பாளருக்கு என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றி என்றும் உரியது.

கைப்படியை அன்புடன் ஏற்று நூலைக் கற்போர் கைகளில் கவின் பெற்றுத் திகழும் முறையில் அழகுற அச்சிடச் செய்த யாழ் வெளியீட்டாளர் திருமதி நாச்சம்மைக்கும் நூலை அழகுறக் கோப்பிட்ட சிவா கிராஃபிக்ஸ் நிறுவனத்தாருக்கும் என் இதயங் கலந்த நன்றி.

இந்நூல் அச்சாகுங்கால் பார்வைப்படிகளை மூலப்படியுடன் ஒப்பு நோக்கியும், பார்வைப் படிகளில் எழுந்த பிழைகளைக் களைந்தும் உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு.ப.சியாமளாவுக்கு என் அன்புகலந்த நன்றி.

இந்த நூலைப் பெரியார் வழிநின்று வாழ்ந்த- வாழும்- வாழப் போகும் பெரியார் அன்பர்கட்கு அன்புப் படையலாக்கியதில் பெருமையும் பெருமிதமும் கொள்கின்றேன்.

XIII