பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தந்தை பெரியார் சிந்தனைகள்


இல்லத்திற்கு வருவர். பேசி அளவளாவுவோம். அப்பொழுதே இருவரும் துணை வேந்தர்களாக உயர்வர் என என் மனம் எண்ணியதுண்டு. ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது; மூன்றாண்டு மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார்.

நண்பர் டாக்டர் சி. அ.பெருமாள் அவர்கட்கு அந்த வாய்ப்பு வரவில்லை; அஃது அவருக்கு இழப்பு ஒன்றுமில்லையாயினும், அவர்தம் சீரிய கல்விப் பணியைத் தமிழர்கள் இழந்தனர். டாக்டர் பெருமாள் ஒரு பெரிய சிந்தனையாளர் என்பதற்கு அவர் கொணர்ந்த "மதிப்பியல் பேராசிரியர் திட்டம்" ஒன்றே சிறந்த சான்றாக அமைகின்றது. இத்திட்டம் உண்மை உழைப்பாளர்கட்குத் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு தருகின்றது. அத்திட்டத்தில்தான் அடியேன் “வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியராக" (தமிழ் இலக்கியத்துறையில்) பணியாற்றுகிறேன். மூன்று பிஎச்டி மாணாக்கர்கட்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்ற வாய்ப்பும் பல்கலைக்கழகம் தந்துள்ளது. இரு ஆசிரியப் பெருமக்கள் ஆய்ந்து வருகின்றனர். டாக்டர் சி. அ.பெருமாளும் மதிப்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்; மாணாக்கர் உலகத்தில் சிறந்த செல்வாக்குடன் திகழ்கின்றார். 1983-இல், இவர் துணைவேந்தராக வந்திருந்தால் பல்கலைக்கழகம் பல்வேறு திசைகளில் முன்னேற்றம் கண்டு திகழும் என்பது என் கருத்து. இஃதுடன் இஃது நிற்க.

தந்தை பெரியார் சிந்தனைகளை மூன்று தலைப்புகளில் (1) கடவுள், சமயம்பற்றிய சிந்தனைகள் (2) சமூகம்பற்றிய சிந்தனைகள் (3) மொழிபற்றிய சிந்தனைகள் என்று மூன்று நாள் பேசத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்த டாக்டர் இரா. தாண்டவன் (பேராசிரியர், துறைத்தலைவர், அண்ணா வாழ்வியல் மையம்) அவர்கட்கு மிக்க நன்றி.

1. கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகள்

முதற்பொழிவாக இந்தத் தலைப்பில் பேசத் தொடங்குவதற்கு முன் தந்தை பெரியாரைப்பற்றி அறிமுகமாகச் சில கூறுவேன்.

(1) இலக்கண நூற்பாபோல் பாவேந்தர் பாரதிதாசனின் அறிமுகம் இது!

அவர்தாம் பெரியார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்