பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் சமயம்பற்றிய சிந்தனைகள்

3


மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோர் கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியி ருப்பு
விடுத லைப்பெரும் படையினர் தொகுப்பு!

தில்லி எலிக்கு வான்ப ருந்து
தெற்குத் தினவின் படைம ருந்து
கல்லா ருக்கும் கலைவி ருந்து
கற்ற வர்க்கும் வண்ணச் சிந்து!

சுரண்டு கின்ற வடக்க ருக்குச்
சூள்அ றுக்கும் பனங்க ருக்கு !
மருண்டு வாழும் தமிழ ருக்கு
வாழ வைக்கும் அருட்பெ ருக்கு !

தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்!

தமிழர் தவம் கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை.[குறிப்பு 1]

பாவின் சொல், சொற்றொடரின் பொருள் 'பொரி மத்தாப்பு' போல் சீறி எழுவதைக் கண்டு மகிழலாம்; அந்த ஒளியில் தந்தை பெரியாரின் உருவத்தை மானசீகமாகவும் காணலாம்.

(2) நான் நெருக்கமாகப் பழகினவரையில் என் அறிமுகம் இது:

கல்லூரியில் படித்த காலத்தில் (1934-39) அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன்[குறிப்பு 2]; குடியரசு, விடுதலை இதழ்களில் வந்த அவருடைய கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன்; நேரில் பேசினது இல்லை. துறையூரில் என் முயற்சியால் தொடங்கப்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் முதல் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் நெருங்கிப் பழகினேன்[குறிப்பு 3]. தேவாங்கர் தெருமக்கள் எல்லாம் சுயமரியாதைச் கட்சியினர்; அவர்களில் முக்கியமானவர் அரங்கசாமி செட்டியார்; அவர் வீட்டில்தான் அய்யா அவர்கள் தங்குவதுண்டு. ஆண்டிற்கு ஆறு, ஏழு முறை அய்யா அவர்கள் கட்சி வேலையாகவும், திருமணம் முதலியவை


  1. பாவேந்தர்
  2. 1934-39 ஆண்டுகளில், அப்போது அவர்தாடி இல்லாதவராக இருந்ததாக நினைவு- அப்போது என் வயது 18; அவருக்கு வயது 55.
  3. 1944 முதல். அப்போது என் வயது 28; அவர் வயது 65. தாடியுடன் இருந்ததாக நினைவு.