பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தந்தை பெரியார் சிந்தனைகள்


சிவப்பிரகாச அடிகள் ஒரு பாடலில் தன் கற்பைனையை விரிக்கின்றார்.

அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான்
'ஐயஎன்ன செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என்சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ‘நீ அப்படி
விகடம் என்செய் தாய்’ என
‘மருவும்என் கைந்நீள முழம் அளந் தான்’ என்ன,
மயிலவன் நகைத்து நிற்க,
மலையரையன் உதவவரும் உமையளை நோக்கிநின்
மைந்த ரைப்பா ராய்’ என
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பெறாது ஈண்ட கன்னி
கணபதியை அருகழைத்து, அகமகிழ்வு கொண்டனள்
களிப்பு டன்உமை காக்கவே[1]

என்ற பாடலில், எந்த வேளையில் வேண்டுமானாலும் விவகாரம் வந்துவிடும் என்பது தெளிவு.

வாழ்க்கை என்பதே விவகாரம் மலிந்த ஒன்று. தொல்லைகள் பல அதில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆயினும் அதைப் பற்றி அப்பெருமான் அல்லற்படுவதில்லை. மனை வாழ்க்கையை மாற்றியமைக்கவேண்டும் என்ற ஏக்கமும் அவருக்கு இல்லை. உள்ள ஏற்பாடே உயர்ந்தது என்ற சித்தாந்தம் அப்பிரானுக்கு நெடுநாள் ஆய்வின் பலனாய்த் தோன்றியது போலும்.

கயிலயங்கிரியில் மட்டுந்தான் இந்நிலை என்று கருதவேண்டா. காணுமிடமெங்கும் இயற்கையில் இதே காட்சிதான் தென்படுகின்றது. உலக வாழ்க்கையில் முரண்பாடுகளுக்கு முடிவு இல்லை. இன்பத்தை நாடுபவனைத் துன்பம் துரத்துகிறது. நட்பை நாடுகிறவனுக்கு பகை வந்து சேர்கின்றது. அமைதி தேடுபவனுக்கு அலைபாயும் நிலைகுலைவு நேரிடுகின்றது. இந்த மாறுபாடுகளுக்கு இடையில் வாழ்க்கை உறுதிப்பாடடைய வேண்டும். உறுதிப்பாடே இல்வாழ்க்கையின் நோக்கம். யாரிடத்து உறுதிப்பாடு உண்டோ அவர் தக்கார். யாரிடத்து அஃது இல்லையோ அவர் தகவிலர். இயற்கையின் அமைப்பும் அதில் மனிதன் கடைப்பிடிக்கும் இல்லறம் என்னும் நல்லறமும்


  1. சிவப்பிரகாசர்-தனிப்பாடல்