பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தந்தை பெரியார் சிந்தனைகள்


உணரவும் வல்லது மனம். இவை ஆறும் ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை. முகம் போன்று இவை பாராட்டப்பெறல் வேண்டும். முறையாக இவற்றை வளர்க்குங்கால் ஒவ்வொன்றும் ஒரு முகத்துக்குச் சமமானது.

'பகவான்' என்னும் சொல்லுக்கு ஆறுகுணசம்பந்தன் என்பது பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், செல்வம் கீர்த்தி ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்து உள்ளனவோ அவன் பகவான், இந்த ஆறனுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக அமைந்து விட்டாலேயே சாதாரண சீவன் ஒருவன் பெருமகனாகி விடுகின்றான். இந்த ஆறு தெய்வமகிமைகளும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் மிளிருமானால் அவன் முருகக் கடவுளாகவே ஆகிவிடுகின்றான். பிறந்தது நாணற்காடு ஆகிய பிரபஞ்சம். ஆங்கு வளர்ந்திருந்து அடையப்பெறும் பெருமையாவும் தெய்வ சம்பத்துகளாம். ஆறுமுகமுடைய குமரேசன் இந்தக் கோட்பாட்டை ஓயாது உயிர்களுக்கு நினைவூட்டி வருகின்றான்.

ஆறுமுகத் தத்துவத்தில் தன்னையே மறந்து ஆழங்கால் பட்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைத் துதிக்கும் பாடல் இது:

ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே;
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே;
கூறும்அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே;
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே;
மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே;
வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே;
ஆறுமுகம் ஆனபொருள் நீஅருளல் வேண்டும்;
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே.

இன்னும் முருகனது மூவித சக்திவடிவம், வள்ளி - தெய்வயானை தத்துவம், தேவசேனாபதி, நான்முகனைச் சிறையில் வைத்தல், சூரசம்காரம், குகன், ஞானபண்டிதன் என்பவைபற்றியெல்லாம் தத்துவங்கள் உள்ளன. இங்ஙனம் முருகனடியார்கள் சிந்தித்து எழுதியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் ஏற்பட்டன என்று சொல்வதற்கில்லை. என்ன காரணத்தாலோ பார்ப்பனர்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள் தந்தையவர்கள். வெள்ளைக்காரர் ஆட்சியில் பார்ப்பனர்கள் படித்து அரசு அலுவல்களில் சேர்ந்து விட்டனர். பலமட்டங்களில் அவர்கள் அக்காலத்தில் செய்த அட்டகாசங்கள் சொல்லிமுடியா. இதனால் தான் அக்காலத்தில் நீதிகட்சி